அதிமுக விருப்பமனு பெற அவகாசம் குறைப்பு: மார்ச் 3 கடைசி நாள்

அரசியல்

தேர்தலுக்கான அவகாசம் குறைவாக உள்ளதால், அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய ஒருமாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் அதிமுக தரப்பில், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது போன்ற பணிகள் இன்னமும் முழுமை அடையவில்லை. அதை முடித்து வேட்பாளர் நேர்காணல், இறுதிப்பட்டியல் வெளியீடு, தொகுதிகளில் பிரசாரம், தேர்தல் அறிக்கை என பல்வேறு பணிகளை செய்தாக வேண்டியுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு குறுகிய அவகாசமே இருப்பதால், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5ஆம் தேதிக்கு பதில், மார்ச் 3க்குள் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள், நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-02-2021 முதல், வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு விருப்பமனு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 6-04-2021 அன்று, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும், அதிமுகவினருக்கு 03-03-2021 வரை, புதன்கிழமை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *