தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாமகவும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்று, நேற்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழக அரசியல் களம் சுறுசுறுப்படைந்துள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த உள்ளன. மார்ச் 2 முதல் 6 வரை விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த சூழலில் அதிமுக தரப்பில், கூட்டணி பேச்சு வார்த்தைகள் மும்முரமடைந்தன. இன்று காலை சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அதிமுக – பாஜக தலைவர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக பாஜக மாநில தலைவர் எ.முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்
இந்த சூழலில், அதிமுக – பாமக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இதில், அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், பாமக-விற்கு அதிகம் ஆதரவு இருக்கும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பேச்சு வார்த்தையின் முடிவில், பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவானது. இம்முடிவை இரு கட்சி தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.