இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் உள்ள, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து விளையாடிய இந்திய அணி, 53.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, இதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, மீண்டும் தடுமாறியது. கேப்டன் ரூட் 19, ஸ்டோக்ஸ் 25, போப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில், இங்கிலாந்து அணி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 49 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி இந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி 7.4 ஓவரில் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. ரோஹித் சர்மா 25 ரன்கள், கில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் மட்டுமே 27 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர். இரு இன்னிங்சிலும் அக்சர் 11 விக்கெட் கைப்பற்றினார். அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டோக்சை (25), வெளியேற்றிய அஷ்வின், ஆர்ச்சரை ‘டக்’ அவுட்டாக்கினார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

இரு அணிகளின் தொடக்க வீரர்களான கிராலி, ரோஹித் சர்மா ஆகிய இருவர் மட்டுமே அரைசதத்தை எடுத்திருக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன் எடுப்பதே அதிசயமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *