அக்சர் படேல் அபார பந்து வீச்சு:இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட்டில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் உள்ள, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

பிங்க் நிற பந்து கொண்ட டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீசி, இங்கிலாந்து அணியை கட்டுக்குள் வைத்தனர். இதனால் ரன் சேர்க்க இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.

தொடக்க வீரர் டாம் சிப்லி, பேர்ஸ்டோ இருவரும், முறையே இஷாந்த் சர்மா மற்றும் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். ஜோ ரூட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ஓரளவு நிலைத்து விளையாடிய கிராவ்லியை 53 ரன்களில், அக்‌ஷர் படேலின் பந்தில் வெளியேறினார். இதேபோல், 12 ரன்கள் எடுத்த நிலையில், பென்ஸ்டோக்ஸையும் அக்‌ஷர் படேல் வீழ்த்தினார்.

முடிவில் இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சை தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *