விருப்பமனு அளித்த அதிமுகவினருக்கு மார்ச் 4 முதல் நேர்காணல்

அரசியல்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.கவில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது; காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு குறுகிய அவகாசமே உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில், அரசியல் கட்சிகள் உள்ளன. விருப்ப மனு பெறுவதற்கான அவகாசத்தை மார்ச் 5க்கு பதில் மார்ச் 3 என, நாட்களை அதிமுக குறைத்தது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம், மார்ச் 4ம் ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும். மார்ச் 4ம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட வாரியாக நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென்று, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.

இதேபோல், மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதில், விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *