தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் – திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி எம்.பி கனிமொழி வாக்கு சேகரிப்பு
பண்ருட்டியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்வதாகவும், வங்கிகளில் ஹிந்தி பேசுபவர்கள் தான் வேலையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என்றார்.

ஆவடி தொகுதி தேமுதிக வேட்பாளர் சங்கரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சங்கரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குச் சேகரித்தார். ஆவடி எம்ஜிஆர் திடலுக்கு வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கைகளை காட்டி ஆதரவு திரட்டினார்.
அமமுக சார்பில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் சேலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்
தமிழக தேர்தலில் அம முக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சேலம் தாதகாப்பட்டியில் உள்ள மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள், 12 ஸ்மார்ட் சிட்டிகள் கொடுத்தவர் மோடி – மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை ஆதரித்து சி.டி.ரவி பிரச்சாரம்

கோ பேக் மோடி என்று கூறியவர்களுக்கு மத்தியில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் 12 ஸ்மார்ட் சிட்டிகளை கொடுத்தது இதே மோடி அரசு தான் என்றும் இலங்கை தமிழர்களின் உள்கட்டமைப்புக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது என்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அதிமுக கூட்டணியான பாஜக வேட்பாளர் சி.கே. சரஸ்வதியை ஆதரித்து சி.டி.ரவி வாக்கு சேகரித்தார். இந்தியாவில் வருமான வரித் துறையினர் சுதந்திரமாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு கிடைக்கும் தகவல் மூலமே சோதனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஒகேனக்கல் உபரிநீரை தர்மபுரிக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவேன் – அன்புமணி ராமதாஸ் பரப்புரை
ஒகேனக்கல் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரும் திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் கூறி அமைச்சர் தங்கமணி வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். பள்ளிபாளையம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன வீதி, மசூதி வீதி, தோல் மண்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சென்ற அவர், அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்களிடம் கூறி பிரச்சாரம் செய்தார்.
வாக்கு கேட்டு வந்த வேட்பாளருக்கு முத்தம் கொடுத்து ஆதரவு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு பெண் முத்தம் கொடுத்து ஆதரவு அளித்து உள்ளனர். தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி கோவிந்தாபுரம், சத்திரம், கொட்டாமுத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவு அளித்தனர்.
பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு 1000 கிலோ ஆப்பிள் மாலையை வழங்கி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
சென்னை பல்லாவரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திறந்த வாகனத்தில் சென்றபடி குரோம்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக நிர்வாகிகள் அவருக்கு ஆயிரம் கிலோ எடையிலான ராட்சத ஆப்பிள் மாலையை கிரேன் மூலம் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மநீம ஆட்சி மலர்ந்தால் தமிழகத்தில் மாநில சுயாட்சி பாதுகாக்கப்படும் – கமல்ஹாசன்
மக்கள் நீதி மையத்தின் ஆட்சி மலர்ந்தால் தமிழகத்தில் மாநில சுயாட்சி பாதுகாக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனையை கூறி திருமயம் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்
தமிழகத்தை சீரிய முறையில் வழி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி மீண்டும் தொடர திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்துவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுகோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் டிடிவி தினகரன்
தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை டி.டி.வி தினகரன் உருவாக்குவார் என்றும் தினகரனுடனான கூட்டணி என்பது தேர்தலோடு நின்று விடாது என்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி தெரிவித்து உள்ளார். சிறுபான்மை இன பாதுகாவலர்கள் என்று சொல்லுபவர்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி வாக்கு சேகரித்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி போல் தற்போதும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் தற்போதைய தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். “சுண்டைக்கா கால் பணம், சுமை கூலி முக்காப்பணம்” என்று பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பு குறித்து பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.