2ஜி, 3ஜி, 4ஜி எல்லாமே தமிழகத்தில் உள்ளது:அமித்ஷா வைத்த குறியால் திமுக கலக்கம்

அரசியல்

பிரதமர் மோடியை தொடர்ந்து, அவரது வலதுகரமாக செயல்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தேர்தல் பிரசாரத்தில் திமுகவை குறி வைத்து, கடுமையாக தாக்கி பேசியிருப்பது, திமுக தலைமையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2ஜி 3ஜி 4ஜி எல்லாமே தமிழகத்தில் உள்ளது என்ற அமித்ஷாவின் ஆணித்தரமான குற்றச்சாட்டு, திமுக தலைவர்களின் நிம்மதியை கெடுத்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் பாஜக தலைவர்கள், பொதுவாக காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்வார்கள், அல்லது ஆளுங்கட்சி சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் பேசுவார்கள். ஆனால், இம்முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, அவரது வலதுகரமான உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரின் பிரசாரமும், மாறுபட்டு இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 ம் தேதி புதுச்சேரி மற்றும் கோவையில் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். வழக்கமான மென்மையான அணுகுமுறைக்கு மாறாக, இம்முறை பிரதமர் மோடியின் பேச்சில் காரம் தெரிந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி, திமுகவை குறி வைத்து அவர்களை வறுத்தெடுத்தார்.

திமுக ஆட்சி என்றாலே, மாவட்டம்தோறும் ரவுடியிசம் பெருகும். சமூக விரோதிகள் தலைதூக்கி விடுவார்கள் என்று காட்டமாக தாக்கிய மோடி, திமுகவும் காங்கிரசும் ஊழலில் ஊறித் திளைத்த கட்சிகள். ஊழல் செய்வதற்காகவே திமுக தன் மூளையை பயன்படுத்துகிறது. தங்களின் சட்டைப்பையை மட்டுமே நிரப்பிக் கொள்ளவே திமுகவும், காங்கிரசும் நினைக்கின்றன என்று விளாசினார். பிரதமர் மோடியின் இந்த திடீர் தாக்குதலை, திமுக தலைவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

பிரதமர் மோடிதான், திமுகவினரை தாறுமாறாக கிழித்தார் என்றால், அடுத்து தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், திமுவை வெளுத்து வாங்கினார். அமிஷாவின் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும், திமுகவை சாட்டையால் அடிப்பது போல் இருந்தது.

விழுப்புரத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக – காங்கிரஸ் கூட்டணி தங்களது குடும்பத்தை மட்டுமே நினைத்து செயல்படுகின்றன. அவர்கள் தமிழக மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. சோனியா தனது மகன் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறையாகவும், கவலையாகவும் இருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக துடிக்கிறார் என்று அமித்ஷா பேசியபோது, பொதுமக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

அத்துடன், ராகுல் காந்தியையும் அவர் விட்டுவைக்கவில்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்க்க இன்று ராகுல் வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இருந்தபோதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போது காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் திமுகவும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய அமிஷா, தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுதான் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது என்று ஒரே போடுபோட்டார்.

மேலும், 2ஜி 3ஜி 4ஜி என அனைத்துமே தமிழகத்தில் உள்ளது. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறை. 3ஜி என்றால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று 3 தலைமுறை. 4 ஜி என்றால் நேரு, இந்திரா, சோனியா, ராகுல் என்று நான்கு தலைமுறை என்று ஒப்பிட்டு பேசிய அமைச்சர் அமித்ஷா, திமுகவிலும், காங்கிரசிலும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று, கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தமிழக தேர்தல் பிரசார பேச்சில், முதல்முறையாக திமுகவை கடுமையாக விமர்சித்திருப்பது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல், திமுகவினர் யோசித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் பாஜக தலைவர்களின் பேச்சு, நிச்சயம் திமுக மீதான மாயத் தோற்றத்தை விலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *