நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா! இன்று நெல்லைக்கு ராகுல் வருகை

அரசியல்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது; உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்; காங்கிரஸ் எம்.பி. ராகுல், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது . வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வது, தொகுதிப் பங்கீடு என்ற கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. மறுபுறம் தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.

பாரதிய ஜனதா சார்பில், பிரதமர் மோடி ஏற்கனவே புதுச்சேரி மற்றும் கோவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். காங்கிரஸ் தரப்பில், அதன் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த மாதம் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.

இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடி, நெல்லை ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.

இன்று காலை 10:45 மணிக்கு தூத்துக்குடி வரும் ராகுல் காந்தி, பிற்பகல் 12 .45 மணிக்கு தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிரசாரமும், மாலை 6 மணிக்கு நாங்குநேரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் ராகுல் பங்கேற்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தேர்தல் வெற்றி வியூகம் வகுப்பதில் கைதேர்ந்தவரான அமித்ஷா தமிழகம் வருவதால், அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *