நிலம் அபகரிக்க நடுரோட்டில் கட்டிப்போட்டு சித்தரவை: இளம்வாக்காளர்கள் அறிந்திராத ‘இருண்ட காலம்’!

அரசியல்

உருட்டுக்கட்டை, வீச்சறுவாள், கொலை மிரட்டல் என்று, 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் அவலங்களை, இன்றைய இளம் வாக்காளர்கள், கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2006 – 2011 வரை தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றது. அந்த கால கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பயின்று கொண்டிருந்த சுமார் ஒரு கோடி பேர், வரும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலி முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இளம் தலைமுறை வாக்காளர்களில் பலரின் மனதில், திமுக என்னவோ தமிழகத்தின் உரிமைகளை மீட்க அவதாரம் எடுத்த கட்சி போலவும், மாணவர்கள், பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது திமுக மட்டும்தான் என்பது போலவும் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2006 – 2011 வரை தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் அவலங்கள், அப்போது திமுகவினர் நிறைவேற்றிய அராஜகங்கள், மின்வெட்டு போன்ற பலவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திமுக ஆட்சி காலத்திலும் அதன் பிறகு 2011 முதல் 2018 வரையிலான அதிமுக ஆட்சி காலத்திலும் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது? திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிந்தது. குறிப்பாக நில அபகரிப்புகள் சர்வசாதாரணமாக அரங்கேறின. பலரும் அச்சுறுத்தப்பட்டு நிலம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். 2011ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும், நில அபகரிப்புக்கென்ற தனியாக ஒரு துறையை ஏற்படுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிமுக அரசு ஏற்படுத்திய நிலஅபகரிப்பு புகார் தொடர்பான பிரிவுக்கு, 8900 புகார்கள் வந்தன. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் அச்சுறுத்தி தங்களிடம் இருந்து திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் நிலத்தை அபகரிக்கப்பட்டதாக, அந்த புகார் மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 450க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதில் முக்கியமான சம்பவமாக ஈரோடு அருகே பெருந்துறையில் என்.கே.கே.பி. ராஜா, அப்போது அமைச்சராகவும் திமுக செயலாளராகவும் இருந்தவர். 10 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து கேட்டு மிரட்டியதும், அந்த நிறுவனம் தர மறுத்தபோது சிவபாலன் என்ற இளைஞரை நடுரோட்டில் கட்டிப்போட்டு இரவு முழுக்க அடித்து துவைத்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. சிவபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீட்க, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, வேறுவழியின்றி என்.கே.கே.பி. ராஜாவை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக நீக்கியது.

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த போது, உத்தமசோழபுரம் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் படை காவலர் ஒருவருக்கு சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை, அடித்து மிரட்டி அபகரித்தனர். சமீப காலத்தில் கூட சென்னை அண்ணாநகரில் இயங்கும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜுக்கு சொந்தமான தனியார் பள்ளி, அருகே உள்ள 1.4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றனர். இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்று, பின்னர் பள்ளி இருக்கும் இடம் மா நகராட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வருகிறது.

இதுபோல், திமுகவினர் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான நிலம், இடம், வீடு என எதையும் அப்பாவி மக்களை அச்சுறுத்தி, எழுதி வாங்கி அபகரிப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இதுபோன்ற புகார்கள் எழுந்தனவா, அமைச்சர்கள் அத்துமீறிய சம்பவங்கள் என்று எதையாவது குறிப்பிட முடியுமா என்பதை, புதியதாக வாக்களிக்கப் போகும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் துணை ஆய்வாளர் வெற்றிவேல், பட்டப்பகலில் ரவுடிகளால் வெட்டிக் கொல்லபட்டார். அவர், நடுவழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அந்த வழியே அப்போதைய திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் மொய்தீன்கான் இருவருமே, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, தங்கள் வாகனங்களில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இந்தளவுக்கு தான் திமுக அமைச்சர்களின் மனிதாபிமானமும் இருந்தது. இந்த காட்சிகளை இணையதளங்களில் இன்றைய தலைமுறை வாக்காளர்கள் தேடிப்பார்த்து பார்வையிட்டால், நிச்சயம் துடிதுடித்துப் போவார்கள்.

2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற சட்டக்கல்லூரி வளாகத்தில், விழா ஒன்றுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், அப்போதைய மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, அப்போதைய முதல்வர் கருணாநிதி, அப்போதைய சட்ட அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில், முதல் வரிசையில் இருந்த சிலர் இலங்கை விவகாரத்தில் கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர்.

இதை சகித்துக் கொள்ளாத திமுகவினர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலையிலேயே, கறுப்புக்கொடி காட்டிய வழக்கறிஞர்களை தாக்கி காயப்படுத்தினர். இவ்வாறு, சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொள்வதில் திமுகவினர் துளியும் கவலைப்படுவதில்லை. 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்தது; அத்துடன் அப்போது நிலவிய மின்வெட்டை இன்றும் பலர் மறக்கவில்லை.

ஆட்சியில் இல்லாதபோதும் கூட திமுகவினர் கடந்த சில ஆண்டுகளில் செய்த அராஜகங்களின் பட்டியல் நீள்கிறது. ஓசி பிரியாணி கேட்பது, பார்லருக்குள் சென்று பெண்ணை தாக்குவது, வழிவிடாத டிரைவருக்கு அடி உதை, வடை- டீ வாங்கி குடித்தால் காசு தருவதில்லை என்று திமுகவினரின் அட்டூழியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய தலைமுறை வாக்காளர்கள், இந்த தகவல்களை அறிந்து கொண்டு, கட்சியின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து, தங்களது பொன்னான தேர்தல் வாக்கினை பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *