எடுபடாத எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம்!குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்

அரசியல் இந்தியா

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அரசியலாக்கி ஆதாயம் தேட முற்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு, குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளனர். அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆறு மாநகராட்சிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் நடந்தது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும், 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில், அகமதாபாத்தில் 42.5 சதவீத வாக்குகளும், ஜாம்நகர் 53.4 சதவீத வாக்குகளும், ராஜ்கோட்டில் 50.7 சதவீத வாக்குகளும், பாவ் நகரில் 49.5 சதவீத வாக்குகளும், வதோதரா 47.8 சதவீத வாக்குகளும், சூரத்தில் 47.1 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஆறு மாநகராட்சிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஆரம்ப நிலவரங்கள் நேற்று பிற்பகல் வாக்கில் தெரிய வந்தன. முடிவுகள் நேற்று மாலையில் இருந்து வெளியாகத் தொடங்கின. குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆரம்பம் முதலே ஆறு மாநகராட்சிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை பெற்றது. இந்த ஆறு மாநகராட்சிகளில் மொத்தம், 576 வார்டுகள் உள்ள நிலையில், 409க்கும் அதிகமான வார்டுகளில், பா.ஜ.க முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், 30க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.

அகமதாபாத் மாநகராட்சியை பொருத்தவரை மொத்தம் 192 வார்டுகள் உள்ளன. இதில் 159 இடங்களை பாஜக கைப்பற்றியது. ராஜ்கோட்டில் 72 வார்டுகளில் 68; ஜாம் நகரில் 64 வார்டுகளில் 50; வதோதராவில் 76 வார்டுகளில், 69; சூரத்தில் 120 வார்டுகளில் 93; பாவ் நகரில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 44 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

இத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. சூரத் மாநகராட்சியில் ஒரு இடம் கூட கிடைக்காத அவலம், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியைவிட ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைத்துள்ளன.

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த வெற்றி ஆளும் பாஜகவுக்கு உத்வேகத்தையும், தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் டெல்லியில் நடைபெறும் அரசியல் கூத்துகள், பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரசாரங்களை மக்கள் புறந்தள்ளிவிட்டு, பாஜகவிற்கு வாக்களித்திருப்பது, அதன் செயல்பாடுகளில் அவர்கள் முழு திருப்தி அடைந்திருப்பதையே காட்டுவதாக, நடுநிலை அரசியல் நோக்கர்கள் கருத்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *