குஜராத் உள்ளாட்சி தேர்தல்: நகராட்சி, ஊராட்சிகளிலும் பாஜக அபார வெற்றி

அரசியல் இந்தியா

குஜராத் உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, ஊராட்சி தேர்தலிலும் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் குஜராத்தின் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 231 தாலுகாக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், நகராட்சிகளி 58.82% வாக்குகள் பதிவாகின; மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 65.80%, தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 66.60% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

கடந்த 23ம் ஆம் தேதி, 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பா.ஜ.க. 483 வார்டுகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 55 வார்டுகளில் மட்டுமே வென்றது. சூரத் மாநகராட்சியில், 120 வார்டுகளில் 93 இடங்களை பாஜக வென்றது.

இந்த நிலையில், நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்றுகாலை தொடங்கியது.
இதில், பல இடங்களில் தொடக்கம் முதலே பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், மொத்தமுள்ள 81 நகராட்சிகளில் 71இல் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி, 5 நகராட்சிகளில் வெற்றி வாய்ப்பை கொண்டிருக்கிறது.

மேலும், தாலுகா ஊராட்சிகளிலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மொத்தமுள்ள 231 இடங்களில் பாஜக 185 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 34 இடங்களில்தான் முன்னிலை பெற்றிருக்கிறது. குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *