ராகுல் பிரசாரத்தில் விதிமீறல்: காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு

அரசியல் தமிழகம்

நெல்லை டவுன் பகுதியில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது துணை வட்டாட்சியர் புகார் அளித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக – திமுக தலைவர்கள் ஏற்கனவே பல மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி ஏற்கனவே புதுச்சேரி மற்றும் கோவையில் பிரசாரம் செய்தார்; உள்துறை அமைச்சர் அமித்ஷா, விழுப்புரம், காரைக்கால் பகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

காங்கிரஸ் தரப்பில், அக்கட்சி எம்.பி. ராகுல்காந்தி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் ராகுல், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, முத்தையாபுரம், முக்காணி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். பின்னர், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, நெல்லை டவுன் பகுதியில், நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த ராகுல், பிற்பகலில் தென்காசி மாவட்டத்தில் வாக்கு சேகரித்தார்.

இதில், நேற்று நெல்லை டவுன் பகுதியில் ராகுல்காந்தி பிரசாரம் செய்த நிலையில், அதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் அனுமதியின்றி ராகுல் பிரசாரம் செய்ததாக, துணை வட்டாட்சியர் விஜயா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *