காங்கிரஸ் கட்சியினரை மதிக்காத திமுக – குமுறிய சிதம்பரம்

அரசியல்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ திமுகவின் திட்டம் தான் காரணம் என சொல்லப்படும் வேளையில், திமுக காங்கிரசை மதிப்பதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுயுள்ளார். தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கூட்டணிக்கு திமுகவே தலைமை வைக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தங்களை மதிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குறை கூறினார்.

கூட்டணி கட்சியான திமுக உரிய மரியாதையை காங்கிரஸ் கட்சிக்கு தருவது இல்லை என்ற குறை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உள்ளது. பூத் கமிட்டி பணத்தை சரியாக பிரித்து கொடுப்பதில்லை என்பது நியாயமான குற்றச்சாட்டு தான். கூட்டணி கட்சியான திமுக ஒவ்வொரு பூத்துக்கும் 20 பேர் இருக்கின்றனர், ஆனால் காங்கிரஸ் கமிட்டியில் வெறும் ஐந்து பேர்தான் உள்ளனர். நாமும் 20 நபரை நியமித்தால் தான், நம்மை திமுக மதிக்கும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நமது துணை இல்லாமல் அவர் வெற்றி பெற்று இருக்க முடியாது. அதே போல் மக்களவைத் தேர்தலில் அவர்கள் தோழமை இல்லாமல் நாமும் வெற்றி பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிக்கு இணையான பலத்தை நாமும் காட்டினால் தான் நம்மை மதிப்பார்கள், என சிதம்பரம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *