பள்ளிகளில் வகுப்பு நடைபெறுமா? இல்லையா? குழப்பத்தில் பெற்றோர்கள்!

தமிழகம்

தமிழகத்தில், 9 ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அரசு அறிவித்த நிலையில், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதா, வேண்டாமா என்ற குழப்பம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்றார்.

அத்துடன், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். இதையடுத்து, நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை நம்பி பெற்றோரும், தேர்ச்சி என்ற அறிவிப்பால் மாணவர்களும் உற்சாகமடைந்தனர்.

ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோ, கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும். வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றார். எனினும், தேர்ச்சி பெற்றதாக அறிவித்த பிறகு பாடங்கள் நடத்தினால், மாணவர்கள் எப்படி உற்சாகத்துடன் இனி படிப்பார்கள் என்று பெற்றோர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் நடைபெறுமா என்பதில் இன்னமும் தெளிவான அறிவிப்பு அரசிடம் இருந்து வெளியாகாததால், நாளை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா என்ற குழப்பம் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *