காங்கிரசில் மீண்டும் சலசலப்பு: கட்சி பலவீனமாகஉள்ளதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி

இந்தியா

காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது உண்மை என்று, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். இது, காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சி, ஜம்முவில் இன்ரு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் பலர் பங்கேற்று பேசினர்.

மூத்த தலைவர் கபில் சிபல் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். விமானத்தை அனுபவம் வாய்ந்தவரால் மட்டுமே ஓட்ட முடியும். ஆனால், அதன் என்ஜினில் ஏற்படும் கோளாறுகளை, அதன் பொறியாளர்தான் சரி செய்ய முடியும். குலாம் நபி ஆசாத் அனுபவம் வாய்ந்தவர். அவர், சிறந்த பொறியாளர். அவரது பணியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், ஒவ்வொரு மாவட்டம் வாரியாக காங்கிரஸ் கட்சியின் கள நிலவரத்தை, உண்மை நிலையை தெரிந்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். குலாம் நபி ஆஸாத்தின் அனுபவத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்று பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா பேசுகையில், கடந்த 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர், மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பிரதிநிதி யாரும் இல்லை என்ற நிலை வந்தது கிடையாது. ஆனால், இப்போது அப்படியல்ல. இந்த தவறு சரி செய்ய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது.

நாங்கள் குரல் கொடுப்பது, காங்கிரஸ் கட்சி பலமடைய வேண்டும் என்பதற்காகத்தான். அனைத்து மட்டத்திலும் கட்சி பலப்பட வேண்டும். இன்றைய இளம் தலைமுறையுடன் கட்சி தொடர்பு கொள்ள வேண்டும். எனது வயதான காலத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதை பார்க்க விரும்பவில்லை என்று ஆனந்த் சர்மா பேசினார்.

இறுதியாக பேசியாக குலாம் நபி ஆசாத் பேசினார். அவர் தனது உரையில், கடந்த 5- 6 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சனைகள், தேவைகள், வேலைவாய்ப்பின்மை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது. ஜம்மு அல்லது காஷ்மீர் அல்லது லடாக் என எந்த பகுதியிலும் வசிக்கும் அனைத்து மக்கள், மதம் ஆகியவற்றை மதிக்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துகிறோம். இதுவே நமது பலம்; அது தொடரும் என்றார்.

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் ஜம்முவில் கூடி, சோனியா, ராகுல் ஆகியோரின் தலைமையை மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அக்கட்சி பலவீனமாக உள்ளது என்று மூத்த தலைவர்களே வெளிப்படையாக கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *