மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் ஊரடங்கு அமல்?

தமிழகம்

தேர்தல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால், 2020 ஆண்டு மொத்தமும் முடங்கியது. எனினும், 2021 ஆம் ஆண்டு நம்பிக்கையுடன் பிறந்துள்ளது. கொரோனா பிறந்தது சீனாவில் இருந்தாலும், மருந்து கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு வினியோகிப்பதில், இந்தியா வழிகாட்டியாக இருந்து வருகிறது. அதே நேரம், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், நம் மக்களிடையே அலட்சியப் போக்கு அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா தொற்று மீண்டும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இதுவரை மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று 1,59,590 ஆக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இது 1.44 சதவீதம் ஆகும்.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக 16,488 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதில் 85.75 சதவீத பாதிப்புகள், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தான் என்ற கவலைக்குரிய புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்; அங்கு, 8,333 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து கேரளா (3,671) உள்ளது.

கொரோனா தொற்று தலை தூக்கி இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களே ஒப்புக் கொள்ளும் நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கூட்டமாக கூடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, கொரோனா தொற்றின் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்திலும் அதுபோன்ற நிலை உருவாகிவிடுமோ என்ற கவலையும் உள்ளது. எனினும், இனி வரும் நாட்கள் கோடை காலம் என்பதால், கொரோனா தொற்று பரவல் வேகம் மட்டுப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *