நாடு முழுவது கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயால், கடந்த ஓராண்டாக உலகமே முடங்கியது. இந்த கொடூர தொற்று நோய்க்கு, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்தியா சார்பில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் பெரியளவில் பக்க விளைவுகளோ, வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது கேட்டுக் கொண்டார்.
கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி போடும் திட்டத்தில், மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு, ‘கோவின்’ என்ற செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்; அல்லது, தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.