சஷ்டி நாளில் வாக்கு எண்ணிக்கையா? திமுகவினர் கலக்கம்!

அரசியல் ஆன்மீகம் தமிழகம்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி சஷ்டி நாளாக இருப்பதால், முடிவுகள் எதிர்மறையாக அமைந்துவிடுமோ என்று, செண்டிமெண்டாக திமுகவினர் கவலையடைந்துள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. மனு மீதான பரிசீலனை, மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. முத்தாய்ப்பாக,
வாக்கு என்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி சஷ்டி நாளாகும். அன்றைய தினம் தேர்தல் முடிவு வெளியாக இருப்பது திமுகவில் ஒருதரப்பினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இந்த தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை, தமிழக பாஜக நடத்திய வேல் யாத்திரை, வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தினரின் செயல்பாடு, இந்துக்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது. கறுப்பர் கூட்டத்தினரை கைது செய்யக்கோரி பல இடங்களில் இந்துக்களும், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர், கறுப்பர் கூட்டத்தினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கறுப்பர் கூட்டத்தினரின் பின்னணியில் திமுக இருந்ததாக சொல்லப்படுகிறது. காரணம், இவ்வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான சுரேந்திரன் திமுக உறுப்பினராக இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே, சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தினரை கண்டித்து, தமிழக பா.ஜ.க-வின் சார்பில், நவம்பர் 6-ம் திருத்தணியில் வேல் யாத்திரையை பாஜக தலைவர் முருகன் தொடங்கினார்.

இந்த வேல் யாத்திரைக்கு தடை போட பல தரப்பினரும் பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டை போட்டனர். நீதிமன்றங்களை நாடினர். இறுதியில், தடைகளை உடைத்தெறிந்து, திருச்செந்தூரில் வேல் யாத்திரை வெற்றிகரமாக நிறைவடைந்தது. பாஜகவின் வேல் யாத்திரை வெற்றி, அதனால் இந்துக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி ஆகியன, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தின.

இதன் பலனாக, கடவுள் மறுப்பு கொள்கைகளை பேசி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பலரும், முருகனின் வேலை கையில் ஏந்தும் சூழல் ஏற்பட்டது. இவ்வாறு தேர்தலுக்கு முன்புவரை தமிழக அரசியலில் சஷ்டி கவசமும், முருகப் பெருமானின் வேலும் பேசுபொருளாக இருந்தது. தேர்தலில், வேலின் தாக்கம் இருக்கும் என்று பல கட்சிகளும் உள்ளுக்குள் கலக்கத்தில் உள்ளன.

இச்சூழலில், தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி, சஷ்டி நாளாக இருப்பதை அறிந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆச்சரியமும், உள்ளுக்குள் கவலையும் அடைந்துள்ளன. என்னதான் வெளியே பகுத்தறிவு வேஷம் போட்டாலும், உள்ளுக்குள் திராவிடத் தலைவர்கள் பலருக்கும் பல செண்டிமெண்டுகள் உள்ளன. அதற்கு உதாரணமாக இருந்தவர், காலம் முழுவதும் மஞ்சள் துண்டுடன் வலம் வந்த கருணாநிதி.

தமிழக தேர்தல் முடிவு வெளியாகும் மே 2ம் தேதி முருகப்பெருமானுக்குரிய சஷ்டி நாளாக இருப்பதை அறிந்து, திமுக பெரும்புள்ளிகள் பலரும் செண்டிமெண்டாக, கவலையில் உள்ளனராம். தேர்தல் முடிவுகள், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதே அவர்களின் கவலைக்கு காரணம். அதே நேரம், பாஜக, அதிமுக தொண்டர்களோ, இந்த செண்டிமெண்டால் உற்சாகமடைந்துள்ளனர். வேலிருக்க வினையில்லை மயில் இருக்க பயமில்லை என்று, பாஜக, அதிமுக, இந்து அமைப்புகள் உத்வேகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *