தமிழக சட்டசபை தேர்தல் எப்போது? இன்று நாள் குறிக்கிறது ஆணையம்

அரசியல் தமிழகம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் தேதிகளை இறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தின் முழு ஆணையக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிறைவடைகிறது. அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, ஐந்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள், வாக்குப்பதிவு நடத்தும் நாள் உள்ளிட்டவை குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

இச்சூழலில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், வாக்குப்பதிவு தேதி உள்ளிட்ட தேர்தல் அட்டவணையை இறுதி செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னமும் முழுமையாக அகலாத நிலையில், தேர்தலை எப்படி நடத்துவது, பதற்றமான பகுதிகள் எவை, எந்த மாநிலத்தில் எத்தனை கட்டமாக வாக்குப்பதிவை நடத்தலாம் என்பது குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இன்று, சட்டமன்றத் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டாலும், மார்ச் மாத முதல் வாரத்தில்தான் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *