தமிழகம் முழுவதும் களைகட்டியது சட்டப்பேரவை தேர்தல் திருவிழா..! காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை

அரசியல்

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியதோடு, சைக்கிள் ரிக் ஷாவை ஓட்டி வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக கூறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா, புதுக்குளம் பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதன் பின்னர் அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள டீ கடையில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருச்சி மேற்கு தொகுதியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் பத்மநாதன் என்பவரும், அமமுக சார்பில் மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

சேலம் வடக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடும்  திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வழக்கறிஞர் ராஜேந்திரன் தில்லைநகர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்களிடையே நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, திறந்த வெளி வாகனத்திலும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட அப்துல் ரசாக் தெரு, திடீர் நகர், கோதாமேடு, சலவையாளர் காலனி, சலவைத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி படிப்பை பயில தாம் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.கே.பிரகாஷ் பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோபிசெட்டிபாளையம் நகர பகுதிகளில் டார்ச் லைட்டுடன் தனது தொண்டர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் என்.கே.பிரகாஷ், அவ்வழியாக சென்ற பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் ஆதரவு திரட்டினார்.

அதிமுக சார்பில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், திமுக சார்பில் ஜி.வி.மணிமாறனும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் களம் காண்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வில்லிசேரி கிராமத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எளிமையான முதலமைச்சர் இருப்பதாக தெரிவித்தார். 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமுத்தேவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திண்டுக்கல் குமரன் திருநகர், அண்ணாநகர், லட்சுமி சுந்தரம் காலனி, அபிராமி நகர், உள்ளிட்ட தெரு வீதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர். வேடமணிந்த அமமுக தொண்டர் ஒருவர் தப்பாட்டம் மற்றும் டிரம்ஸ் இசைக்கு உற்சாகமாக நடனமாடினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், வாக்காளர்களுக்கு துண்டு போர்த்தி வாக்கு சேகரித்தார். புதிய பேருந்து நிலைய பகுதியில் பட்டாசு வெடித்து, ஆதரவாளர்களுடன் பிரசாரத்தை தொடங்கிய அவர், பூக்கடைவீதி, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், வியாபாரிகளுக்கு துண்டுபோர்த்தி வாக்கு சேகரித்தார். டீக்கடையில் தேநீர் அருந்தி, ஸ்வீட் கடையில் இனிப்பு சாப்பிட்டு ஆதரவு திரட்டினார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் மேலூர் காடைபிள்ளை அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தை அதிமுக தான் ஆள வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாக தெரிவித்தார். 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாரதி புரம் ,சந்தைரோடு, முனியப்பன் கோவில் தெரு , என்விஜிபி சாலை ,சௌராஷ்ட்ரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை செய்து கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.பி.கிரி கூட்டணி கட்சியினரை சந்தித்து வாக்கு சேகரித்ததோடு, செல்பி எடுத்துக்கொண்டார்.

செங்கம் சட்டமன்றத் தொகுதி 2-வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கிரி, அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த பின், செ.நாச்சிப்பட்டு, அன்வராபாத், குயிலம் ஆகிய கிராமங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தொண்டர்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

சேலம் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் அக்கட்சி வேட்பாளர் வெங்கடாசலம் பொதுமக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சத்திரம் பகுதிகளில் தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம், வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதியில் இருந்த டீக்கடையில் தொண்டர்களுடன் டீக்குடித்து மகிழ்ந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உடபட்ட காமராஜர் தெரு, லேக் ஏரியா , கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை சந்தித்து நலம் விசாரித்த எழிலன், அவருக்கு தேவையான மருந்துகளை பேப்பரில் எழுதி கொடுத்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *