‘ஸ்டாலின்தான் வர்றாரு’ விளம்பரப்பதாகை: திமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு!

அரசியல்

திமுக சார்பில் ‘ஸ்டாலின்தான் வர்றாரு’ என்ற விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு, தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

தமிழகத்தில், ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. அதிமுக தரப்பில் வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற பாடலுடன் விளம்பரம், டிவி, நாளிதழ்கள், ரேடியோ, இணையதளங்களை ஆக்கிரமித்தன.

அதிமுகவின் விளம்பரத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து, திமுகவும் தன் பங்கிற்கு எதையாவது செய்ய நினைத்தது. அதிமுகவுக்கு பதிலடி தருவதாக நினைத்து, ‘ஸ்டாலின்தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு’ என்ற பாடல், திமுக கூட்டங்களிலும் திமுக ஆதரவு டிவிக்களிலும் திரும்பத் திருப்ப ஒளிபரப்பப்பட்டது. அதிமுகவின் ‘வெற்றி தரும் தமிழகமே’விளம்பரம் சென்றளவுக்கு கூட, இது போய்ச் சேரவில்லை.

இதனால், விளம்பரப்பாணியை மாற்றிப்பார்க்கலாம் என்று முடிவு செய்த திமுக, தமிழகம் முழுவதும் 9500 இடங்களில் டீக்கடைகள் முன்பாக, ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு என்ற வாசகங்களுடன் விளம்பரப் பதாகை வைக்க முடிவு செய்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் கடிதம் மூலம் திமுக அனுமதி கேட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டாலின் தான் வர்றாரு என்ற விளம்பர பதாகை வைப்பது தொடர்பான திமுக கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், விளம்பரம் தொடர்பான உண்மைத்தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர்தான் பொறுப்பாக வேண்டும். கடைகளில் விளம்பர பதாகை வைக்க வேண்டுமானால், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரப்பதாகை வைப்பது தொடர்பாக, அந்தந்த பகுதி மாவட்ட அதிகாரியேமுடிவு செய்வார்கள். விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் எனவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *