நெருங்கும் தேர்தல்… சூடு பிடிக்கும் பிரச்சாரம்..!

அரசியல் இந்தியா

மிழகத்தில் வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாக்கு சேகரிப்பு

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். முத்துக்கொண்டாபுரம் கோடுவள்ளி,ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார்.

அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் – திருமாவளவன்

தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதைவிட அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன் அதே நிலைதான் பாமகவுக்கும் வரும் என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி விசிக வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை ஆதரித்து தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜகவினர் கூடவே இருந்து கொண்டே குழி பறிக்கும் வல்லமை கொண்டவர்கள் என அப்போது அவர் குற்றம்சாட்டினார்.

மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து ஆழ்வார்புரம் பகுதியில் வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலின்  கோபுரங்களில் தெற்கு கோபுரம் தான் உயரமானது, அதேபோல் மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டார்.

ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ.பெரியசாமி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று பித்தளைப்பட்டி கிராமத்தில் அவர் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பெரியசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 3 லட்சம் அரசுக் காலிப்பணியிடங்கள் இளைஞர்களால் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கே.என்.நேரு நடைபயிற்சியாளர்களிடம் வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக முதன்மை செயலாளரும், வேட்பாளருமான கே.என்.நேரு, கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு துண்டு அணிவித்து ஆதரவு திரட்டிய அவருடன், இளைஞர்கள், சிறுவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரிதா தீவிர தேர்தல் பிரச்சாரம்

குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரிதா, உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடியாத்தம் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், இன்று தென்குளக்கரையில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றார். அங்குள்ள காய்கறி மற்றும் கீரைக்கடைகளில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டே வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடமும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பரிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துச்சாமி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அங்கிருந்த சிறுவனுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்

சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பின் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கூட்டணி கட்சியினருடன் ஜாமியா மஜீத் தெரு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் எம்ஜிஆர் வேடம் அணிந்த ஒருவரும் வந்து ஆதரவு திரட்டினார்.

எடப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் சம்பத்குமார் காய்கறி வியாபாரிகளின் கால்களில் விழுந்து ஆதரவு திரட்டினார்

எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சம்பத்குமார் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் சம்பத்குமார், கோவிலில் அனைத்து சாமிகளையும் பயபக்தியுடன் வணங்கினார். கோவில் அர்ச்சகரிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி ஆதரவு கோரினார். பின்னர் உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்களில் வியாபாரிகள், பொதுமக்களின்  கால்களில் விழுந்து  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். 

காஞ்சிபுரம் தொகுதியில் ம.நீ.ம கட்சி வேட்பாளர் கோபிநாத் பூக்கடை சத்திரத்தில் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கோபிநாத் பூக்கடை, காய்கறி பகுதிகளுக்கு நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பூக்கடை சத்திரத்திலுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் டார்ச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடையை மூடுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளதாக கூறினார்.

ராயபுரம் திமுக வேட்பாளர் 10,000 வாக்குகளைக் கூட பெற மாட்டார் – அமைச்சர் ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை பலவீனமான சுயேட்சையான வேட்பாளராகவே தான் பார்ப்பதாகவும், அவர் 10 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற மாட்டார் என்பதை, தொகுதியில் உள்ள குழந்தைகளை கேட்டால் கூட சொல்லும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்கிருந்த தேனீர் கடையில் தேனீர் அருந்தி வாக்கு சேகரித்தார்.

விளவங்கோட்டில் பாஜக வேட்பாளர் ஜெயசீலன் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயசீலன் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவ்வழியாக வந்த தூய்மை பணியாளர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரத்தில் 2வது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எழிலரசன் புல்லட் வாகனத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2வது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எழிலரசன், புல்லட் வாகனத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தாமல், திருப்புக்குழி, மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், கிளார், பெரும்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்ற அவர், காஞ்சிபுரத்தில், அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்றும், நெசவாளர்களுக்கு பல சலுகைகள் செய்து தருவதாக உறுதியளித்து ஆதரவு திரட்டினார்.

கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட சுக்ரவார்பேட்டை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் உடன் திரண்டு சென்ற பாஜக வேட்பாளர்  வானதி சீனிவாசன் மக்களை நேரடியாக சந்தித்து பாஜகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க டெல்லியில் இருந்து வந்திருந்த பெண்கள் சுக்ரவார்பேட்டை பகுதியில் உற்சாசமாக தமிழ் மற்றும் இந்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பூ தீவிர வாக்கு சேகரிப்பு 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு தொண்டர்களுடன் திரண்டு சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மாடன் ஸ்கூல் ரோடு, அஜீஸ் முல்க் தெரு, குலாம் அப்பாஸ் அலி கான் தெரு,
காதர் நவாஸ் கான் ரோடு, சுதந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வெளி வாகனத்தில் சென்ற பாஜக வேட்பாளர் குஷ்பூ தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் பெண்ணுரிமை காக்க தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் தீவிர வாக்கு சேகரிப்பு

வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.கே.அசோக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன் அக்கட்சியின் ஆதரவாளர்கள் 500 இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கணிப்பை தான் நம்புவதில்லை எனவும் மக்கள் கணிப்பையே நம்புவதாகவும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜமுனா பாய் நகர், ஸ்டேட் பாங்க் காலனி ,கென்னடி ஸ்கொயர், காமராஜ் நகர், பந்தர் கார்டன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்பகுதியிலுள்ள மகளிர் குழுக்களுடன் அவர் கலந்துரையாடலும் நடத்தினார். கொளத்தூர் தொகுதியில் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்ததற்கு நன்றி தெரிவித்த அப்பகுதி பெண்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியம் கிடைக்க ஸ்டாலின் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் மேள தாளம் முழங்க தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன், மேள தாளம் முழங்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். புரசைவாக்கம் வடமலை தெரு, தாண்டவராயன் தெரு , தாணா தெரு, வெங்கடேசன் தெரு பகுதிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயசூரியன் தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயசூரியன் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக சார்பில் 6-வது முறையாக போட்டியிடும் அவர், மாத்தூர், மண்மலை, செல்லம்பட்டு, பால்ராம் பட்டு, கரடிசித்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று ஆதரவு திரட்டினார். அப்போது தெரு தெருவாக சென்ற அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

எழும்பூர் தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் பிரியதர்சினி மீன் வறுவல் செய்து கொடுத்து பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்சினி, நரியங்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மீன் வறுத்து கொடுத்து வாக்கு சேகரித்தார். கட்சி நிர்வாகிகளுடன் டார்ச் லைட்டுடன் சென்று பிரயதர்சினி வாக்கு சேகரித்தார். அப்போது சமையல் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் கரண்டியை வாங்கி சிறிது நேரம் குழம்பு வைத்தார். கோலா மீன் வறுவலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரிடம் கரண்டியை வாங்கி பிரியதர்சினி மீன் வறுத்தார். பின்னர் வறுத்த மீன்களை எடுத்து கொண்டே அங்கிருந்த குடியிருப்புவாசிகளிடம் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

மாதவரம் தொகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் மூர்த்தி

மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூர்த்தி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக செங்குன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக தேர்தல் பணிமணையை மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனையடுத்து அப்பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வந்தவாசியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அம்பேத்குமார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அம்பேத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரியத்தூர், வழுர், விழுதுப்பட்டு, கீழ்கொடுங்கலூர் மங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதிகளில் வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று அம்பேத்குமார் வாக்கு சேகரித்தார்.

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன், கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் மாநகராட்சி 52 மற்றும் 53வது வார்டுகளுக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர், கிருஷ்ணா நகர் பகுதிகளுக்கு சென்ற அவருக்கு, ஆரத்தி எடுத்து, சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் கேள்வி கேட்ட மூதாட்டிக்கு பொறுமையாக பதிலளித்து வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், தேர்ந்தெடுத்தால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள் எனக் கேட்ட மூதாட்டிக்கு பொறுமையாக பதிலளித்து வாக்கு சேகரித்தார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய எழிலன், பேரறிஞர் அண்ணா வசித்த இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார். இதனிடையே, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து மு.க.தமிழரசு கோபாலபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பன் தொண்டர்கள் புடை சூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.கடலூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம், வன்னியர்பாளையம்,  மணலி   எஸ்டேட், மரிய சூசை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் உடன் சென்று மக்களை சந்தித்த அவர்  உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வஹாப் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கைலாசபுரம், கணேசபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடுவீடாக சென்று திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துக் கூறியும் அதன் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் சிவசங்கரி தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் சிவசங்கரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மென்பொறியாளரான இவர் தொகுதிக்குட்பட்ட பாண்டி பஜார் சாலையில் மேள தாளங்கள் முழங்க தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். திநகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஜெ.கருணாநிதியும், அதிமுக சார்பில் சத்ய நாராயணனும் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ. வேலு தீவிர பிரச்சாரம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எ.வ. வேலு, திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள 39 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜீப்பில் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். திருவண்ணாமலை மலையடிவார பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தார். திமுக பிரச்சார பாடலுக்கு நடன கலைஞர்கள் உற்சாக நடனம் ஆடி வாக்கு சேகரித்தனர்.

தியாகராய நகர் தொகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கருணாநிதி

சென்னையில் தியாகராயநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கருணாநிதி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கு மாம்பலம், காந்தி தெரு, சேசன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் திரளான கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *