ஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு

அரசியல் தமிழகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறும் நிகழ்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எடப்பாடி தொகுதியில் ஈ.பி.எஸ்., போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட மனு அளிக்கின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் தொடங்கி வைத்தனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகவும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவின் பிறந்தநாளாகவும், சுபமூகூர்த்தம் நிறைந்த புதன் கிழமையாகவும் இருப்பதால், இன்றே இருவரும் அதிமுகவில் விருப்ப மனு அளிக்கின்றனர்.

அதிமுக விருப்ப மனுக்களை, கட்சி தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் . விருப்பமனுவுக்கு தமிழ்நாட்டில் ரூ. 15,000, புதுச்சேரியில் ரூ.5 ஆயிரம், ரூ. 2000 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *