தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். நள்ளிரவு வரை பேச்சு

அரசியல் தமிழகம்

அதிமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்ல்செவம் உள்ளிட்டோர், நள்ளிரவு வரை பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்வதில், அதிமுக- திமுக கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், பாமகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அந்த கட்சிக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா, தே.மு.தி.க கட்சிகளுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கினர். நேற்று முன்தினம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பா.ஜ.க. தமிழக தலைவர்கள் நேற்று காலையும் சந்தித்து பேசினர்.

இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்திற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். காரைக்கால், விழுப்புரம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த அமித்ஷாவை, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க. தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி, பா.ஜ.க. பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜ்க தமிழகத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதில், அ.தி.மு.க – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் முடிவில், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக, பா.ஜ.க. தரப்பில் 30 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், எனினும் அ.தி.மு.க. தரப்பில் 20 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்தன.

இரு கட்சித் தலைவர்களின் பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த பேச்சு வார்த்தையில் பாஜக தரப்பில், கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகள் தேவை என்று கேட்கப்பட்டதாகவும், தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை தொடர்பாக, ஓரிரு நாளில் இறுதி முடிவு வெளியாகலாம் என்றும் தெரிகிறது. தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் 2ம் நாளாக நேற்றும் பேச்சு நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையும் நள்ளிரவு வரை நீடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *