ஈ.வி.எம் மை ஹேக் செய்ய முடியாது! ஒத்துக் கொண்ட திமுக

அரசியல் இந்தியா தமிழகம்

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈ.வி.எம்) – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. இதனை தொழில்துறை ரீதியாக வடிவமைத்தவர்கள் ஐ.ஐ.டி பாம்பேயின் தொழில்துறை வடிவமைப்பு மையத்தில் ஆசிரிய உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர். உலகின் அதிகபட்ச நம்பிக்கை கொண்ட ஒரு இயந்திரம் ஒன்று உண்டு என்றால் அது, இந்தியத் தேர்தல் ஆணையம் உபயோகப்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களே எனலாம். இது மிகைப்படுத்திய பாராட்டு அல்ல, இதை இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் திமுகவினரே ஒத்துக் கொண்டுள்ளனர் திமுகவினர்.

கடவுளையும் நம்ப மாட்டோம், அறிவியலையும் நம்ப மாட்டோம் என்ற திமுக போன்ற சில கட்சிகள், தேர்தலுக்கு முன்னர் கண்டெய்னர்களில் ஹேக்கிங் நடக்கிறது, விமானத்தில், சாட்டிலைட்டில் இருந்து ஹேக்கிங் நடக்கிறது என்று உளறிக் கொட்டி வந்தனர். ஒருவேளை தாங்கள் இந்த தேர்தலில் தோற்றுவிட்டால், தோல்விக்கு காரணமாக ஈ.வி.எம்களை சொல்லிவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். முன்னொரு காலத்தில் சிசிடிவி (CCTV) கேமிராவை மட்டுமே பார்த்து பயந்து வந்த அந்தக் கட்சியினர், இன்று கண்டெய்னர் பார்த்தால் பயம், செல்போன் பார்த்தால் பயம், ப்ளூடூத் பார்த்தால் பயம், பென் டிரைவ் பார்த்தால் பயம், அவ்வளவு ஏன் டிவி ரிமோட் பார்த்தால் கூட பயம் எனச் சொல்லித் திரிந்ததால, சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார்கள்.

ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின், ஈ.வி.எம் மை ஹேக் செய்ய முடியாது என ஒத்துக் கொண்டுள்ளனர் திமுகவினர். அவர்களுக்கு என்ன தெரியுமோ தெரியாதோ, நீங்கள் ஈ.வி.எம் மை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்:

ஈ.வி.எம் கள் முதன்முதலில் 1982 இல் கேரளாவின் வடக்கு பரவூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலில், குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் கோவா சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தலில் (முழு மாநிலத்திலும்) ஈ.வி.எம் கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. 2003 ஆம் ஆண்டில், அனைத்து இடைத்தேர்தல்களும், மாநிலத் தேர்தல்களும் ஈ.வி.எம்-களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்1, எம்2, என்ற நிலைகளைக் கடந்து நவீன மயமாக்கப்பட்ட எம்3 ரகமே தற்போது நடைமுறையில் உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இந்தப் புதிய வகை எம்3 பயன்பாட்டில் உள்ளது. பழைய எம்1 ரகத்தில் VVPAT எனப்படும் ஒப்புகைச்சீட்டு அளிக்கும் கருவியை பொருத்த இயலாது என்பதால், புதிய மாறுதல்களுடன் எம்3 பயன்பாட்டில் உள்ளது. நாம் எத்தனை பெரிய மென்பொருள் அறிஞரை, அல்லது ஹேக்கரைக் கொண்டும் இதனை எதுவும் செய்ய முடியாத அளவிற்கு இதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. அதனை உடைக்க நினைத்தாலோ, திறக்க முற்பட்டாலோ, தானாக தனது செயல்பாட்டினை அது நிறுத்திக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிந்தவுடன் Strong Room என்று சொல்லக் கூடிய பாதுகாக்கப்பட்ட பகுதியில் இவை வைக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் அதனை யாரேனும் இயக்க முயன்றால் அதனையும் அது காட்டிக் கொடுத்துவிடும். மெஷின் எப்படி காட்டிக்கொடுக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஓட்டு எண்ணிக்கை அன்று மெஷினை ஆன் செய்தவுடன், Self Diganostic Test என்பதனை தனக்குத் தானே நிகழ்த்தி, ரிப்போர்ட் ஒன்றினை முதலில் அது நமக்குத் தந்துவிடும். ஏதேனும் குளறுபடி நடக்க முற்பட்டிருந்தால் அந்த இடத்திலேயே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிடும். எனவே அவ்வழியிலும் முறைகேடுகள் நடக்க நூறு சதவீதம் வாய்ப்பில்லை.

மேற்கு உலக நாடுகள் தங்கள் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்தும் போது, இங்கு மட்டும் ஏன் ஈ.வி.எம் என நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் இதோ! அந்த நாடுகள் குறிப்பாக, அமெரிக்க, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் முழுவது கணினி மயமாக்கப்பட்ட முறையில் இயந்திரங்களை பயன்படுத்திவந்தன. அதாவது தேர்தல் தொடக்கம் முதல், வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் வரை, அத்தனையும் இணையத்தின் துணையோடு நடக்கும். எங்கு ஒரு நெட்வொர்க்கில் அனைத்தும் இணைக்கப்படுகிறதோ, அங்கு ஹேக்கிங் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன. அதனால்தான் அவர்கள் அம்முறையை கைவிட்டு, வாக்கு சீட்டு முறைக்கு திரும்பினர்.

ஆனால் நம்முடைய ஈ.வி.எம்.களின் சிறப்பே, அவை தனித்து இயங்கக்கூடிய (Standalone) வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதுதான். எந்த நெட்வொர்க் துணையும் இன்றி தனித்து இயங்கக் கூடிய இயந்திரங்கள். சுருக்கமாக இதனை ஒரு கால்குலேட்டர் உடன் ஒப்பிடக் காரணமும் அதுதான். எந்த ஒரு இணைய வலையிலும், அல்லது வயர்கள் வாயிலாகவும், வேறெந்தத் தொடர்பும், இணைப்பும் இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பு இதுவென்றால் அது மிகையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *