கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு வரலாம் என்று சிலர் பொய்த் தகவல்களை பரப்பிய நிலையில், தடுப்பூசி முதல் நாளிலேயே முதியவர்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதல் நாளான நேற்று மட்டும் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்றுக்கு இந்தியா சார்பில் 2 தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் 2ஆம் கட்ட திட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நேற்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் தடுப்பூசியை போட்டு கொண்டார். பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி, அவருக்கு போடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாகும்; அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம். முதல் நாளான நேற்று மட்டும், 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு நேற்று நண்பகல் 12 மணியில் இருந்து தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல மையங்களில் காலையில் இருந்தே முதியவர்கள் ஆர்வமாக வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் பலரும், தங்களுக்கு எந்த பக்க விளைவோ, வேறு பாதிப்போ ஏற்படவில்லை எனவும், எப்போதும் போல் வழக்கமான பணிகளை செய்வதாகவும் உற்சாகமுடன் கூறினர். இதன்மூலம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவு வருமோ என்று சில விஷமிகள் கிளப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, கொரோனா இல்லாத இந்தியா உருவாக வழி வகுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.