ஓடிடி, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள்:மீறினால் 5 ஆண்டு சிறை – மத்திய அரசு அதிரடி

இந்தியா

டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்ட சமூக வலைதள ஊடகங்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கரும் டெல்லியில் கூட்டாகச் செய்தியாளர்களிடம், இது குறித்த வழிமுறைகளை வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:

சமூக வலைதளங்களில் அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும். பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

ஓடிடி தளங்களில் திரையிடும் படங்கள் தொடர்பான பார்வையாளர் காணும் நெறிகளை U, U/A 7+, U/A 13+, U/A 16+, A (18+) என்ற வகைப்பாடுகளைக் காட்டும் வகையில் செயலியை வடிவமைக்க வேண்டும். இதற்கான தணிக்கைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம்.

பதிமூன்று வயதுக்கு மேற்பட்டோர் காணக்கூடிய படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகளாக இருந்தால், அதை 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாதவாறு கடவுச்சொல் போட்டு பூட்டும் வசதி ஓடிடி செயலியில் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல வயது வந்தவர்களுக்கான (18+) A சர்டிபிகேட் படங்களை பார்க்கும் முன் அதைக் காண்போரின் வயதைச் சரிபார்க்கும் வழிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

செய்திகளை வழங்கும் டிஜிட்டல் ஊடகங்கள், இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி செய்திகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். செய்தித்தாள்களுடன் போட்டிபோடும் நேர்த்தியான தளமாக டிஜிட்டல் ஊடகங்கள் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால் போலிச் செய்திகள் பரவுவத தடுக்கப்படும்.

விதிமுறை மீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று, ஓட்டி தளங்களுக்கான அரசின் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *