உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மாநிலம், மமதை முதல்வர்

அரசியல் இந்தியா

சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் என்ற பெரும் தலைவர்களை தந்த மேற்கு வங்காள மாநிலத்தில் தற்போது படுகொலைகளும், துயர சம்பவங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றன. 1977 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் அங்கு கம்யூனிச பயங்கரவாதத்தினால் சுமார் 28,000 அரசியல் படுகொலைகள் நடந்ததாக அன்றைய மேற்கு வங்காள முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சாரியா குறிப்பிட்டார். அதாவது அந்த குறிப்பிட்ட 19 வருடங்களில் மட்டுமே ஆறு மணி நேரத்திற்கு ஒரு அரசியல் படுகொலை நடந்துள்ளது. இதன் மூலம், எந்த அளவிற்கு அங்கு வன்முறை தலை தூக்கி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் பாரத பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள், “கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் வாழ்வதே, மிகவும் பாதுகாப்பற்றது எனவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஊர்” எனவும் குறிப்பிட்டார். மேலும், அங்கே நடக்கும் வன்முறையை கண்ட காங்கிரஸ் கட்சியினர், மேற்கு வங்காளத்தில் குடியரசு ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் , 1989 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை ஒழித்து, 2011 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி ஆட்சியிலும் வன்முறை தலை தூக்கியது. 2018 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 34% இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து, யாரையும் நிற்கவிடவில்லை. அந்த அளவிற்கு பயமுறுத்தி, மற்றவர்களை தேர்தலில் போட்டியிட விடாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 42 தொகுதியில், பாஜக 18 தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த வன்முறை வெறியாட்டத்தில், 11 ஆண்களும், 2 வயது குழந்தையும் படுகொலை செய்யப்பட்டனர். பாஜக கட்சியினர், 130 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.

2021 நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், இஸ்லாமியர்கள் அனைவரும், திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது அறைகூவல் விடுத்தார். இதனால் கோபம் அடைந்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜிக்கு ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை என, இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு, தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் 14 பாஜகவினர் கொல்லப்பட்டதாகவும், ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும்; பெண்கள், குழந்தைகள் கடும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பாஜகவினரை தேடித் தேடி கண்டுபிடித்து அடித்து துன்புறுத்துகிறார்கள் எனவும், தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அவர்களும், மேற்கு வங்காள மாநில அரசை கலவரம் சம்பந்தமாக விரிவான அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், மம்தா தலைமையிலான மாநில அரசு இதுவரை எந்த அறிக்கையும் அனுப்பவில்லை. உள்துறை அமைச்சகம் நினைவூட்டியும், எந்த கடிதமும் அனுப்பாமல் மாநில அரசு காலத்தாமதம் செய்து வருகின்றது.

மக்களாட்சி நடைபெறும் நமது நாட்டில், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களின் உயிரைக் குடித்த அந்த கலவரக்காரர்களை, அடையாளம் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிற்க செய்ய வேண்டும். ஆனால் இது நாள் வரை, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது போல பேசிய மம்தா அவர்கள், தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிதி உதவியை அறிவித்து உள்ளார். இது எங்கு போய் முடியும் என புலம்பி வருகின்றனர் மேற்கு வங்காள மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *