மதுரையில் மின்கசிவால் தீ விபத்து: எலக்ட்ரானிக்ஸ் கடைகள் சாம்பல்

தமிழகம் நகரம்

மதுரையில் மின்கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக் கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில், பெருமாள் தெப்பகுளம் உள்ளது. இதை சுற்றிலும் ஏராளமான எலெக்ட்ரானிக் கடைகள் உள்ளன. நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்துக் கொண்டு, கடைகள் அடைக்கப்பட்டன.

இரவு, 11:00 மணியளவில், அங்கிருந்த எலெக்ட்ரானிக் கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மளமளவென்று எரியத் தொடங்கின. அத்துடன், அருகே இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த 12-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பற்றியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஐந்து தீயணைப்பு வாகனங்களில், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இரவில் நடந்த விபத்தால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *