தொகுதிப்பங்கீட்டில் திமுக மீது அதிருப்தி: கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறுகிறதா?

அரசியல்

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. கூட்டணியில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து அக்கட்சி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே இருப்பதால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியை பொருத்தவரை, பாமகவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது; அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதேபோல், திமுக கூட்டணியிலும் அதன் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 இடங்கள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவில் அமைக்கப்பட்ட குழுவினருடன், மார்க்சிஸ்ட் தலைவர்கள் பேச்சு நடத்தினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற்னர்.

இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் 12 தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 6 தொகுதிகளுக்கு மேல் எதுவும் முடியாது என்று திமுக திட்டவ்ட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால், மார்க்சிஸ்ட் தலைவர்கள் அதிருப்தியடைந்ததாகவும், இன்றைய பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுக தலைமை மீது மார்க்சிஸ்ட் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதை உறுதி செய்வதுபோல், பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்தபோது, அங்கிருந்த நிருபர்களை சந்திக்காமலேயே சென்றனர். தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் அடுத்ததாக என்ன செய்யலாம், கூட்டணியில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து, இடதுசாரி தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *