மின்மிகை மாநிலமான தமிழகம் : பிரச்சாரத்தில் முதலமைச்சர் பெருமிதம்

அரசியல் இந்தியா தமிழகம்

திமுக ஆட்சியில் மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்றதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக ஆட்சியில் தொழில் முனைவோர் தமிழகத்தை தேடி வந்து தொழில் தொடங்குவதாக தெரிவித்தார். 

Groping in the dark - Frontline

கரூர் பேருந்து நிலையம் அருகே, கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், குளித்தலை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முன்னாள் அமைச்சரும், திமுக மாநில விவசாய அணி செயலாளராக இருந்து நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சின்னசாமி, கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பகவான் பரமேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதனையடுத்து, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் உழைப்புக்கும், தியாகத்திற்கும் மதிப்பு கிடையாது எனவும், அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்றார். அதிமுகவில் இருந்தபோது பதவியை அனுபவித்துவிட்டு, ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் செந்தில் பாலாஜி எனவும், அதிமுகவிற்கு ஒரு எட்டப்பன் உண்டு என்றால் அது செந்தில் பாலாஜி தான் எனவும் முதலமைச்சர் கடுமையாக விமர்சித்தார். இதுவரை 5 கட்சிக்கு மாறியுள்ள செந்தில் பாலாஜி, பச்சோந்தி போல் அடுத்தடுத்து கட்சி மாறி விடுவார் என்றும் முதலமைச்சர் கூறினார்.

கரூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையை அதிமுக தான் நிறைவேற்றியது என்ற முதலமைச்சர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் மூலம், நீர் வளத்தை பெருக்கியதோடு, தடையில்லாமல் மின்சாரம் வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக திகழச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும்? எப்போது மின்சாரம் போகும்? என்பதே தெரியாது என சாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு சென்றதாக குறிப்பிட்டார். தற்போது தொழில் முனைவோர் தமிழகத்தை தேடி வந்து தொழில் தொடங்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தானும் மக்களை போல வெயிலில் நின்று பல்வேறு பதவிகள் வகித்து தற்போது முதலமைச்சர் நிலையை அடைந்துள்ளதாகவும், மக்கள் போடும் உத்தரவுகளையே தான் நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *