மாஸ்டர் படத்தில் பவானியாக மிரட்டிய விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.jpg)
கோலிவுட் வட்டாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கிராப் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கைதி பட வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய்யுடன் இணைந்த அவர், மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் படமாகவும் மாறியிருக்கிறது. விஜய் கேரக்டருக்கு இணையாக வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. விஜய்யின் ஹீரோ நடிப்பும், விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, விஜய் சேதுபதியின் ‘பவானி’ கேரக்டர், ரசிகர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால் அவரின் அடுத்தப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கமல்ஹாசனுக்கு காலில் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் தேர்தல் பிரச்சாரம் ஆகியவை இருப்பதால், இந்தப் படத்தின் சூட்டிங் தொடங்க காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியாத நிலையில், அதற்கு முன்னதாக சிறிய படத்தை உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில், மாஸ்டரில் வில்லன் பவானியாக கலக்கிய விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையே நல்ல நட்பு இருப்பதாலும், ஏற்கனவே ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகம் என்பதாலும் புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருவரும் முடிவு செய்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் சிறிய பட்ஜெட்டில், குறுகிய காலத்தில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் இயல்பான மற்றும் அவரது கேரக்டருக்கு சூட்டான கதையம்சம் இருக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் கதையை வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.
படத்தை பற்றிய இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தயாரிப்பாளர், மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும் அதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் ஹீரோ, வில்லன் என எந்த கதாப்பாதிரமாக இருந்தாலும், தனக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கும் வேடங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அவரின் இயல்பான நடிப்புக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருப்பதால், லோகேஷ் கனகராஜ் – விஜய் சேதுபதியின் கூட்டணி உருவாகும் புதிய படம் எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என இப்போதே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் சேதுபதியிடம் சுமார் 10 படங்களுக்கு மேல் கைவசம் உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜூம், கமல்ஹாசனுடன் இணையவேண்டி உள்ளதால், விஜய்சேதுபதி – லோகேஷ் கூட்டணின் புதிய படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.