2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருக்கிறது. ஆனால் நவம்பர் மாதத்தில் இருந்தே கூட்டணி தொடர்பான பேச்சுக்களும், யாருக்கு எத்தனை தொகுதி என்று அரசியல் கட்சிகளும், அரசியல் ஆலோசகர்களும், தேர்தல் கருத்துக் கணிப்பு குழுக்களும் பேச ஆரம்பித்து விட்டனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தமிழகத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இந்த கட்சிகளுக்கு மிக குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பாமக இவர்கள் பக்கம் சாயும் பட்சத்தில் விசிக கட்சியை கழட்டி விடும் எண்ணமும் இருக்கிறதாம்.
சமீபத்தில் ஆ ராசா போன்ற மூத்த திமுக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக சாடி வருகின்றனர். 2G வழக்கு விசாரணை வர உள்ள நிலையில் கனிமொழி, ஆ ராசா கைதாகலாம் என்ற நிலை வந்தால், அவர்கள் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை இந்த ஊழல் வழக்கில் மாட்டி விட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
அப்படியிருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் திமுகவுடனான உறவை முறித்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் திமுகவுடனான கூட்டணியை விட்டு விலக தயாராக இல்லை. காரணம் திமுகவால் மட்டுமே இவர்களுக்கு தேர்தல் நிதியை கொடுக்க முடியும் என்று தெரிகிறது.
இது ஒரு புறம் இருக்க, அதிமுக- பாஜக கூட்டணி அமைதியாக இருக்கிறது. அமித்ஷா சென்னை வந்த போது கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என்று கூறப்பட்ட நிலையில், அமித்ஷா அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. மாறாக இன்று வரை அவர் அமைதி காத்து வருகிறார். அதற்கு காரணம்: (1) 2G விசாரணையில் திமுக கூட்டணி உடையலாம், (2) ரஜினி மற்றும் அழகிரி தனித்தனியே கட்சி ஆரம்பிக்க கூடும், (3) சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் உண்டாகவிருக்கும் சலசலப்பு.
இப்படி பல விதமான அரசியல் மாற்றங்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிகழவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் முனைவர் L முருகன், கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று ஆணித்தரமாக கூறிவருகிறார். பாஜக மேலிடமோ சில முக்கியமான நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது.