சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்து விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

இந்தியா

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 4.09 லட்சம் சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் நாடு முழுவதும் சுவாமித்வா திட்டத்தின் தொடக்கமாகவும் இது அமைந்தது. மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், பஞ்சாயத்துராஜ் அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

ஊரக இந்தியாவின் மறு வளர்ச்சிக்கு உறுதிமொழி ஏற்குமாறு நம்மை நாமே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ளும் நாளாக பஞ்சாயத்துராஜ் தினம் அமைவதாக பிரதமர் கூறினார். நமது கிராம பஞ்சாயத்துகளின் ஈடு இணையற்ற பணியை அங்கீகரித்து, பாராட்டுவதற்கான தினமாக, இது அமைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சுவாமித்வா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாநிலங்களில், ஒரு வருடத்திற்குள் இத்திட்டத்தால் ஏற்பட்ட தாக்கத்தை பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் கிராம சொத்துக்கள் முழுவதும் ட்ரோன் கருவிகளின் மூலம் ஆய்வு செய்யப்படுவதுடன் உரிமையாளர்களுக்கு சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய அட்டை விநியோகிக்கப்படுகிறது. இன்று, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 4.09 லட்சம் மக்களுக்கு இதுபோன்ற மின்னணு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சொத்து ஆவணங்கள், உரிமை நிச்சயமின்மையை தகர்த்து, சொத்து பூசல்களைக் குறைத்து, ஊழலில் இருந்து ஏழைகளை பாதுகாப்பதால் இந்தத் திட்டம், கிராமங்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.‌

கடன்களின் வாய்ப்பையும் இது சுலபமாக்குகிறது. “ஒருவகையில் இந்தத் திட்டம் ஏழை மக்களின் பாதுகாப்பையும், கிராமங்களின் திட்டமிட்ட வளர்ச்சியையும் அவற்றின் பொருளாதாரத்தையும் உறுதி செய்யும்”,என்று பிரதமர் கூறினார். இந்திய ஆய்வறிக்கையுடன் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேவையான மாநிலச் சட்டங்களை மாற்றியமைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சொத்து அட்டையைப் பயன்படுத்தி கடன்களை எளிதில் வழங்கும் வழிமுறைகளை வங்கிகள் ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் எனும் சுவாமித்வா திட்டம், சமூக பொருளாதார அளவில் அதிகாரமளிக்கப்பட்ட, தற்சார்பு மிக்க கிராமப்புற இந்தியாவை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது.

கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஆரம்பக் கட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு: https://svamitva.nic.in/svamitva/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *