ஊழல் செய்யவே மூளையை திமுக பயன்படுத்துகிறது: கோவை கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு!

அரசியல் தமிழகம்

குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக- காங்கிரசால் நல்லாட்சியை தர முடியாது; ஊழல் செய்யவே மூளையை திமுக பயன்படுத்துகிறது என்று, கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

பிரதமர் பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று புதுச்சேரி மற்றும் கோவையில் அரசு விழாக்கள் மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வெற்றிவேல், வீரவேல் என்று தமிழில் கூறி, தனது பிரசார உரையை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி தருகிறது. தமிழர்களால் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. தமிழ் மொழி உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. பொறியியல், மருத்துவக் கல்வி ஆகியவற்றை தாய்மொழியில் பயில நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இந்திய வரலாற்றில் இக்கட்டான நேரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர்.தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் மூலம், புதிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு உதாரணமாக திகழ்கிறது. மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலனுக்காக சேர்ந்து பணியாற்றுகிறது. சிறிய வியாபாரிகள்,விவசாயிகள் நலனுக்கு பா.ஜ.க அரசு முக்கியத்துவம் கொடுத்தது. கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன்பெற்றுள்ளன. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். பிரதமரின் இலவச வீடு திட்டத்தின் மூலம் 12 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. தமிழக நகரங்கள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது. சட்டை பையை நிரப்பி கொள்ளவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. திமுக தனது தொன்மையை இழந்துவிட்டது. ஊழல் செய்வதற்காக தனது மூளையை திமுக பயன்படுத்துகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுகின்றன. திமுக ஆட்சியில் மிகப்பெரிய மின்வெட்டை மறந்திருக்க மாட்டீர்கள். ஒட்டு மொத்த தமிழகத்திற்கான கட்சி என்ற உரிமையை திமுக இழந்து விட்டது.

ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை எப்படி திமுக நடத்தியது என்பதை உலகம் அறியும். ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு திமுகவும் காங்கிரசும் வெகுமதி அளித்தனர். தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி என்பது கருணையுன் கூடிய ஆட்சி. இக்கூட்டணி என்பது அனைத்து மாநில விருப்பங்களையும் தேசத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *