பிரதமர் இன்று புதுச்சேரி, கோவைக்கு வருகை!தமிழில் டிவிட் போட்டு உற்சாகம்!

அரசியல் தமிழகம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (25 ம் தேதி) புதுச்சேரி மற்றும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்களின் வருகை சூடுபிடித்துள்ளது. இச்சூழலில், புதுச்சேரியில், 3,023 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுச்சேரி வருகிறார்.

டில்லியில் இருந்து இன்று காலை, 7:45 மணியளவில் தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 10:25 மணிக்கு வருகிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு புதுச்சேரிக்கு பகல் 11:20 மணிக்கு வருகிறார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பகல் 11:30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில், 3,023 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை, பிரதமர் துவக்கி வைக்கிறார். மதியம், லாஸ்பேட்டையில் பா.ஜ.க சார்பில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், மோடி உரையாற்றுகிறார். அதை முடித்துக் கொண்டு, மீண்டும் சென்னை செல்லும் பிரதமர், 2:15 மணியளவில் தனி விமானத்தில், கோவைக்கு செல்கிறார்.

பிற்பகல் 3.35 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, அரசு விழா நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி அரங்குக்கு செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி), கப்பல் போக்குவரத்துத் துறை, மின் துறை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

அதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகிறார். இக்கூட்டத்தில், பாஜக முக்கியத் தலை வர்கள் கலந்துகொள்கின்றனர். கூட்டம் முடிந்தவுடன் கோவை விமான நிலையத் துக்கு காரில் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

முன்னதாக, இன்றைய கோவை பயணம் குறித்து நேற்று தமிழில் டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, “தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *