ஆட்டம், பாட்டம், தண்டால்: விறுவிறுப்பான தேர்தல் களத்தை விளையாடி வீணடிப்பதாக ராகுல் மீது அதிருப்தி!

அரசியல் தமிழகம்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமான நிலையில் இருக்க, அந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ள ராகுல் காந்தியோ, தேர்தல் பிரசாரத்தின் தீவிரம் புரியாமல், ஆட்டம், பாட்டம் என்ற பொழுதுபோக்கி வருகிறார்.

வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. வாக்குப்பதிவுக்கு குறுகிய அவகாசமே இருப்பதால், அரசியல் தலைவர்கள் தங்கள் பிரசார திட்டத்தை துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ளும் வகையில் பயணத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வழக்கமாக தலைவர்களின் பிரசாரத்தில் அனல்வேக பேச்சு இருக்கும்; ஆக்ரோஷ குற்றச்சாட்டுகள் இருக்கும். ஆனால், எளிமையான தலைவர் என்று காட்டிக் கொள்ள முற்பட்டு ராகுல் காந்தி செய்யும் அலம்பரைகள், அக்கட்சியினர் பலருக்கே எரிச்சலூட்டுவதக உள்ளது.

வேனில் அமர்ந்தபடி ஹாயாக மைக் பிடித்து பேசுகிறார். வேன் போய்க் கொண்டிருக்கும்போதே, கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டு தன்னை எளிமையானவர்களின் நண்பர் என்று காட்டிக் கொள்ள முற்படுகிறார். கேரளாவிலும் இப்படித்தான், மீனவர்களுடன் கடலில் குளித்தார்; மீன்பிடி தூண்டிலையும் போட்டார் – அதில் சிக்கியது என்னவோ ஒரேஒரு மீன்தான். சகுனம் சரியில்யோ என்னவோ.

கடந்த 3 நாட்களாக தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ராகுல் பிரசாரம் செய்தார். பிரசாரம் என்ற பெயரில் அவர் பொழுதுபோக்கி விளையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு நாட்கள் குறைவாகவே உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து தேர்தல் நிலவரத்தை கேட்டிருக்கலாம், அல்லது உரிய அறிவுரைகளை வழங்கலாம்; நேரம் இருந்திருந்தால் இன்னும் 2 கூட்டங்களில் பங்கேற்று பேசியிருக்கலாம்.

ஆனால், ராகுல் காந்தியோ உப்பளத்திற்கு சென்று உப்பு சேகரித்தார். சர்ச் ஒன்றிற்குக்கு சென்று அங்கு மண்டியிட்டு பிரார்த்தனை செய்த ராகுல், பின்னர் நெல்லையப்பர் கோவிலிலுக்கு சென்று வழிபாடு நடத்தி, மதச்சார்பற்றவர் என்று காட்ட முற்பட்டார். கடைசி நாளான இன்று கன்னியாகுமரியில் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தார்.

கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கும்மாளமிட்டார். பிரசார மேடைபோலவே தெரியவில்லை. ராகுல் ஆடியதோடு, அவருடன் கைகோர்த்திருந்த காரணத்திற்காக கே.எஸ். அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளும் ஒருகையில் வேட்டியை பிடித்தபடி ஆடியதுதான் பரிதாபமாக இருந்தது. அதே பள்ளியில், மாணவி ஒருவருடன் போட்டிப்போட்டு ராகுல் தண்டால் எடுத்துக்காட்டினார்.

அட, தேர்தல் பிரசாரம் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, எளிமையானவர் என்று காட்டிக் கொள்ள ராகுல் இந்த ஸ்டண்டுகளை அடிக்க இதுவா நேரம்? தேர்தலுக்கு ஒருமாதமே உள்ளது- இவருக்கு தேர்தலில் சீரியஸ்னஸ் தெரியவில்லை; கட்சியை வளர்க்காமல் உல்லாசமாக பொழுதுபோக்கி வருகிறாரே என்று காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சிலர் வேதனையோடு முணுமுணுப்பதை கேட்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *