மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம்: பாஜக பதிலடிக்கு பிறகும் ராகுல் உளறல்!

அரசியல் இந்தியா

மீன்வளத்துறைக்கு என்று பிரத்யேக அமைச்சகம் இருப்பதை அறியாமல் புதுவையில் உளறியக் கொட்டிய ராகுல் காந்தி, பாஜக பதிலடி தந்த பிறகும் கேரளாவில் மீண்டும் அதே மாதிரி உளறிக் கொட்டி, நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அண்மையில் புதுச்சேரிக்கு சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மீனவர் சமுதாய மக்கள் மத்தியில் பேசும்போது, டெல்லியில் நில விவசாயிகளுக்கு தனி அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளுக்கு ஏன் தனி அமைச்சகம் இல்லை என்று கேட்டிருந்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் எனவும் மீனவர்கள் மத்தியில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் பாஜக அரசால் ஏற்படுத்தப்பட்டதை, ராகுல் காந்தி அறிந்திருக்கவில்லை.

இதையடுத்து மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் கிண்டல் அளித்த பதிலில், மத்திய அரசு கடந்த 2019 மே 31-ம் தேதியே மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை ராகுல் காந்தி அறிந்து கொள்ள வேண்டும். இந்த அமைச்சகம் மூலம் மீனவர்களுக்கு இதுவரை ரூ.3,683 கோடியை அரசு செலவிட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

மீன்வளத்துறை தனி அமைச்சகம் ஏற்கெனவே இருப்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி மீனவர் மத்தியில் உளறி வருகிறார் என பாஜகவினரும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ராகுல் காந்தி இன்னமும் பாடம் கற்றதாகவே தெரியவில்லை. கேரள மாநிலம் கொல்லம் அருகே தங்கச்சேரி கடற்கரைப் பகுதியில் மீனவர்களுடன் ராகுல் உரையாடினார்.

அப்போது, “மீனவர்கள் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மத்திய அரசு வேளாண் துறையைஉருவாக்கி உள்ளது. ஆனால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் இல்லை. டெல்லியில் உள்ளவர்கள் உங்களைப் பற்றி பேசமாட்டார்கள். உங்களுக்காக நான் போராடி தனி அமைச்சகம் உருவாக்குவேன்” என்று, ராகுல் பேசினார்.

பாஜகவினர் பதிலடி தந்த பிறகும் இன்னமும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் என்று ராகுல் பேசி வருவது அவரது அறியாமையையே காட்டுவதாக, பலரும் விமர்சித்துள்ளனர். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் பக்கம் ராகுல் தலைகாட்டினால், இப்படித்தான் ‘பல்பு’ வாங்க வேண்டியிருக்கும்; அவர் இனியாவது நாட்டு நடப்புகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று, நெட்டிசன்கள் ராகுலுக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *