தினமும் திருக்குறள் படிக்கும் ராகுல்: எல்லாம் மோடி கற்பித்த பாடம்!

அரசியல்

தினமும் திருக்குறள் படித்து வருவதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் மொழி மீது இயல்பாகவே பற்று கொண்டு, செல்லுமிடம் எல்லாம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி பேசத் தொடங்கியதை அடுத்து, ராகுலும் தமிழ் மொழி பற்றி பேச ஆரம்பித்திருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நன்கு உணர்ந்துள்ளார். அதனால் தான், பல்வேறு சந்தர்ப்பங்களில் திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றுவதை, அவர் வழக்கமாக வைத்துள்ளார். திருக்குறள் அற்புதமான ஊக்குவிப்பு நூல் என்றும், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள் அனைத்தும் நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என்பதும் மோடியின் கருத்தாகும்.

எல்லையில் லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, ”மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். சர்வதேச அறிவியல் விழாவில் இளம் விஞ்ஞானிகள் மத்தியில் பேசும் போதாகட்டும், மான் கி பாத் வானொலி உரைகளில் ஆகட்டும், பிரதமர் மோடி திருக்குறளை தெரிவித்து, அதன் பொருளைக்கூறி, தனது உரைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

அத்துடன், திருக்குறளை குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து, அதனை பிரதமர் மோடியே வெளியிடவும் செய்தார். செங்கோட்டையில் சுதந்திர தின உரை, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் என, பல இடங்களிலும் தமிழின் சிறப்பையும் திருக்குறளின் தொன்மையையும் குறிப்பிட மோடி தவறுவதில்லை. பிப்ரவரி 25ம் தேதி கோவை நிகழ்ச்சியில் பேசியபோதுகூட, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்ற திருக்குறளை மோடி கூறி, பார்வையாளர்களின் கைத்தட்டலை பெற்றார். மோடியின் கன்னித்தமிழ் பேச்சு சமூக வலைதளங்களில் அதிக வரவேற்ப்பை பெற்றன; அவரது பேச்சுக்கென்றே ஒரு ஆதரவாளர்கள் கூட்டம் உருவாகத் தொடங்கியது.

இந்த சூழலில்தான், தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில், ராகுல் காந்திக்கும் திருக்குறள் மீது பற்று வந்துள்ளது. இது தொடர்பாக அவரது டிவிட்டர் பதிவில், தினமும் திருக்குறள் படித்து வருகிறேன். அதன் கருத்தாழம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காதுகள் மூலம் கேட்டு, கவனித்து அதனை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது திருப்பூரில் டீக்கடையில் டீ குடித்தார்; கரூர் அருகே பிரியாணி செய்வதை பார்த்து, அவரும் பிரியாணியை ருசித்தார். கேரள சுற்றுப் பயணத்தின் போது கடலில் டைவ் அடிப்பது, மீனவர்களுடன் மீன் பிடிப்பது என்று ஹாயாக ராகுல் இருந்து வந்தார். ஆனால், மோடியின் திருக்குறள் பேச்சுக்கு தமிழகத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை பார்த்து, ராகுலுக்கும் இனி அந்த ‘ரூட்டில்’ பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.

எப்படியோ, ராகுலுக்கும் தேர்தல் நேரத்திலாவது திருக்குறள் மீது ஆர்வம் வந்தது நல்ல விஷயம்தான் என்று கூறும் அரசியல் நோக்கர்கள், இதற்கெல்லாம் ஒருவகையில் மோடிதான் காரணம் என்கின்றனர். பிரதமர் மோடியால், ராகுலும் திடீரென தமிழ் ஆர்வலராக மாறிவிட்டார்; தேர்தலுக்கு பிறகும் ராகுலின் தமிழார்வம் தொடருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று, நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *