அயோத்தியில் ராமர் கோவில் – தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்கள் ஆதரவு …
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புனிதமான பணியில் தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் குடும்பங்கள் பங்கேற்பார்கள் என்கிறார் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக பொதுச் செயலாளர் திரு மிலிந்த் பராண்டே.
அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகளை, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். கோவில்கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய அரசுக்கு மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் படி ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா பிப்ரவரி 2020ல் அமைக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான ஹிந்துக்களின் தியாகம் மற்றும் முயற்சி காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் பக்தியின் அடையாளமாக விளங்குவதோடு, ஹிந்துக்களின் பெருமையாகவும் விளங்குகிறது. 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 5 கோபுரங்கள் மற்றும் 3 தளங்களுடன் கோவிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது பல்வேறு ஐ.ஐ.டி. க்கள், லார்சன் & டியூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் , ஸ்ரீ ஷோம்புரா ஜி (கட்டிட வடிவமைப்பாளர்) மற்றும் பல துறவிகள் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்பணியில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் தங்களின் பங்களிப்பை நல்கும் வகையில், அவர்களை தொடர்புக் கொள்ள உதவுமாறு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா, விஸ்வ ஹிந்து பரிஷத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் ஹிந்து சமுதாயத்தை தொடர்பு கொள்ள,நாடு முழுவதிலும் இருந்து துறவிகளும்,பல்வேறு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன. பல லட்சம் தன்னார்வலர்கள் இப்பணியில் பங்கேற்பார்கள். இது தொடர்பாக, மகர சங்கராந்தி 11 ஜனவரி முதல் மாசி பௌர்ணமி தினமான 27 பிப்ரவரி வரை மாபெரும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோவில் கட்டும் பணியில் எவ்வாறு பக்தர்கள் பங்கேற்க முடியும் என்பது குறித்து விளக்குவதுடன், அவர்களிடமிருந்து நன்கொடைகளும் பெறப்படும். இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் ரூ.10, ரூ.100 மற்றும் ரூ. 1,000 மதிப்பிலான கூப்பன்கள் மற்றும் ரசீது புத்தகங்கள் தன்னார்வலர்கள் வசம் இருக்கும். இந்த மக்கள் தொடர்பு திட்டத்தின் மூலம், 4 லட்சம் கிராமங்களில் சுமார் 11 கோடி குடும்பங்களை தொடர்புக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், நகர்புறம், கிராமப்புறம், பழங்குடியின மற்றும் மலைப்பகுதிகள் உட்பட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் அதிகப்படியான மக்களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ராவுடன் இணைக்கும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10000 பஞ்சாயத்துகளிலும் 5000 வார்டுகளிலும் மேலும் 50 லட்சம் குடும்பங்களில் நேரடியாக தொடர்பு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 90 ஆயிரம் தொண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள் பூஜனீய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூஜ்ய பேரூர் மருதாசல அடிகளார் சுவாமிகள் மற்றும் இதர சைவ வைணவ மடங்களின் பெரியோர்களும் இந்த ஆலய மக்கள் தொடர்பு நிதி சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹிந்து சமுதாய மக்களிடமும் கொண்டு செல்வர்.