சீர்திருத்தப் “பெரியார்”

சீர்திருத்தம் என்றும், பெரியார் என்றும் படித்தவுடன் உங்கள் எண்ணம், “கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி” என்று சொன்னவரை நினைத்தால் அது தவறு. பெரியார் யாரும் செம்மொழியாம் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லமாட்டார்கள். கம்ப ராமாயணத்தினை எரிக்கச் சொல்ல மாட்டார்கள், திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்று சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சொல்லியவர்கள் பெரியாராக இருக்கமுடியாதே.

Tamil Nadu: What explains the BJP's animosity towards Periyar and his  statues?

திருவையாற்றில் 1855ல் பிறந்து 1874ல் எப்.ஏ தேர்வில் தேர்ச்சிப் பெற்று 1888ல் திருவல்லிக்கேணியில் உயர்நிலைப்பள்ளியை உண்டாக்கி, அதில் முஸ்லீம்கள், ஒடுக்கப்பட்டோர் என்று பலரையும் சேர்ந்து கல்வியறிவு தந்தவர். 1878ல் “The Hindu” (ஹிந்து) இதழினையும், தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் தேசத்தின் அரசியல் சூழலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சுதேசி மித்ரன் இதழை 1882ல் துவங்கியவர். ஆங்கில அரசு சுதேசிமித்ரனை, ராஜ துரோகத்தினை பரப்பும் பத்திரிக்கை என்று கருதியது. தென்னாட்டு மொழிகள் வளர்ச்சிக்காக “திராவிட பாஷா சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கியவர். பழந்தமிழ் நூல்களை பதிப்பிக்க தனது ஹிந்து பத்திரிக்கை அச்சுக் கூடத்தினால் உதவியதை தமிழறிஞர் சி.வை.தாமோதரப்பிள்ளை தனது கலித்தொகை பதிப்புரை 1877ல் பதிவு செய்துள்ளார்.

1921 இல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தில் அந்நிய ஆட்சி தந்த பட்டம் பதவிகளை துறக்கச் சொன்னார். ஆனால் காந்தியடிகளுக்கு முன்னரே 1907 இல் இதை வடஆற்காடு அரசியல் மாநாட்டில் சொன்ன பெரியார் இவர். முதலாளிகளின் கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள தொழிலாளிகள் குழு அமைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியவர். கொடூரமான கொலைகளை செய்த போதிலும் தூக்குதண்டனை விதிக்கக்கூடாது என்று திருவாங்கூரில் தாணுப் பிள்ளை எனும் தலைமைச் செயலாளர் கொண்டு வந்த போது, இது கொடூர மூட பக்தி என்று எதிர்த்த பிராமணப் பெரியார்தான் ஜி.சுப்ரமணிய அய்யர்.

மனைவியின் விருப்பத்தில் பத்து வயதில் திருமணம், 12 வயதில் விதவையான தனது மகளுக்கு 13 வயது வயதில் மறுமணம் செய்கிறார். பல்வேறு இன்னல்களும் , அவலங்களும் நிறைந்த இரக்கத்தக்க நிலையில் பறையர்களை வைத்திருப்பது இந்து சமூக அமைப்பின் களங்கம்; இந்து நாகரீகத்தின் துடைத்தெரிய முடியாத அவமானம், காலந்தோறும் தொடரும் கொடுங்கோண்மை. இது அவர்கள் முன்னேறவேண்டும் என்ற ஆர்வத்தினை கொன்றுவிடுகிறது. அவர்களுக்கு பரிவு காட்டவோ துணைபுரியாவோ எவரும் இல்லை, இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்கள் முயற்சியால் முன்னேறவேண்டும் என்று சொல்லுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்சுவது போலாகும், என கூறினார்.

மனிதர்கள் எந்த மதம், குலமாயினும் அவர்கள் இந்த உலகில் செய்துவரும் நற்செயல்களை கடவுள் கவனித்துவருகின்றான். அந்த கடவுளின் மனதிருப்தியே மோக்ஷம் என்று நினைத்து வாழ்ந்து வந்த பிராமணப் பெரியார் ஜி. சுப்ரமணிய அய்யர். தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கும் அவர்களது கல்விக்கும், சமூக மேம்பாட்டுக்கும், தொழிலாளர்கள் நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் பாடுபட்டவர்களில் முதன்மையானவர், வழிகாட்டி, முன்னுதாரணம் என்று சொல்ல வேண்டுமானால் அது, அந்த பெரியார் ஜி சுப்ரமணிய அய்யர்தான்.

1908 இல் சுதேசி மித்ரனில் வந்த செய்திகள் தேச துரோகம் என்று ஆங்கில அரசால் குற்றம் சாட்டப்பட்டு தொழுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் கைது செய்யப்பட்டார். பின்பு நிபந்தனையின் பேரில் விடுதலையானார். படுக்கையில் நோயுற்று விழுந்திருந்த போது காந்தியடிகள் இவரை சந்தித்தார். நாட்டுமக்களுக்கு ஏதும் செய்ய முடியாதவனாகி விட்டேனே என்று கண்ணீர் விட்டபடி வருந்தினார் இந்தப் பெரியார். ஏப்ரல் 18, 1916இல் சமூகநீதிகாத்த சீர்திருத்தப் பெரியார் ஜி.சுப்ரமணிய அய்யர் மறைந்தார். நாடு உண்மையான பெரியார்களை மறந்துவிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *