இட ஒதுக்கீடு எனும் அணு வெடி…

பிரமாண்டம் சுருங்கி அணுவாகி, அணு இன்னும் சுருங்கி ‘பகீர்’ என வெடிப்பது, அதன் மூலம் பழைய பிரமாண்டம் காட்டுவது அணு..
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் இருந்த பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் என்ற பாகுபாட்டின் விளைவாக, அப்போதைய நீதிக் கட்சி, இட ஒதுக்கீடு கொண்டு வந்து அரசாணை பிறப்பித்தது.
இந்த இட ஒதுக்கீடு படி படியாக, 1951 ல் 41 சதவீதமாகவும், 1971 ல் 47 சதவீதமாகவும், 1979 ல் 68 சதவீதமாகவும், 1989-ல் 69 சதவீதமாகவும், தொடர்ந்து வளர்ந்து வந்து உள்ளது. அதன் பாதுகாப்பு கருதி 1993-ல் ‘ஒன்பதாவது அட்டவணையில் ‘ சேர்ப்பதற்கான சட்ட மசோதா இயற்றப் பட்டு, 1994 ல் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டது. இதன் மூலம் ‘சட்ட மறு ஆய்வுக்கு’ உட்படுத்த முடியாத பாதுகாப்பு கிடைத்தது.
இன்று 69 சதவீதம் இட ஒதுக்கீடு நடை முறையில் உள்ளது. மீதம் உள்ள 31 சதவீதம் பொது பிரிவினருக்கு ஒதுக்கப் பட்டு உள்ளது.
இன்றைக்கு பா.ம.க வின் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், உண்மையில் எங்கு கொண்டு சேர்க்கும் என்பது கேள்விக் குறி. 1987 ல் நடந்த பலிகள், பொது வாழ்வுக்கான சவால்கள், என்றும் மாறாத வடுக்களாய் இன்றும் நம்மில் நிலைத்து இருக்கத் தான் செய்கிறது.
1987 ல் நடந்த போராட்ட களத்தில், சில தடுக்க முடியாத தொண்டர்களால், சாலை மறியலில், ரோட்டோர மரங்கள், வெட்டி சாய்க்கப் பட்டு சாலைகள் மறிக்கப் பட்டன. அதற்கு பிராயச்சித்தமாக, இன்று ‘பசுமை தமிழகம்’ என்ற அமைப்பின் மூலம் மரங்கள் நடுவது, பாராட்டத்தக்கன என்றாலும், எந்த கூடுதலிலும் எதோ ஒரு வம்பு, பா.ம.க.விற்கு என்று வந்து தொத்திக் கொள்கிறது. இன்று வன்னியர்கள் 20 சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்கும் அதே நேரம், மற்ற ஜாதிகள் பற்றி நினைக்கையில், அணு குண்டு நியாபகம் தான் வருகிறது.
‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற கோஷம். எதை நோக்கி தங்களை முன்னேற்றி இருக்கிறது என்பதை, சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. கண்டிப்பாக, சாலை மறியலில் மரங்களை வெட்டினோம், இன்று ரயில் மறியல் செய்து போஸ்ட் மரங்களை, தண்டவாளங்களில் நிறைத்தோம் என்று இருக்க கூடாது என்பதே நம் எண்ணம்.
லட்சோப லட்சம் வன்னியர்கள் தமிழ் நாட்டில், அதுவும் மக்கள் தொகையில் 20 சதவீதம் மக்கள் உள்ளனர் என்றாலும், அவர்கள் அனைவரும் பா.ம.க விலோ அல்லது வன்னியர் சங்கம் போன்ற அமைப்பிலோ இல்லை, என்பது கண் கூடு. ஏனெனில், அவர்கள் அரசியல் ரீதியான பதிவுகள் மற்றும் வாக்கு பதிவுகள் நமக்கு சொல்கின்றன. இது வரை நடந்த தேர்தல்களில், 5.50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகவில்லை, என்றாலும், மீதம் உள்ள வன்னிய மக்கள், எங்கு சென்றனர். ஒட்டு மொத்தமாக அவர்களின், விருப்பம் வெளிப் படவில்லை என்பது நன்கு புலப் படுகிறது.
இந்த திடீர் போராட்டத்தினால் விளைய போவது என்ன? இறுகி போயுள்ள இட ஒதுக்கீட்டு அணு குண்டுக்கு தீ வைக்குமா! அல்லது அரசியல் பேரத்துக்கு ஆயத்தப் படுத்துமா!! 1980 ல் வன்னியர் சங்கமாக உதயமாகி, வன்னியர்களை ஈர்த்த அதே இயக்கம், 1989 ல் அரசியல் கட்சியாக மாறிப் போன போது, அதே வன்னியர்கள் ஒரே குரலில் ஒலிக்காத காரணம் என்ன? ஒரு சிலரின் சுய லாபம் மேலோங்குமோ என்ற எண்ணம் வந்து இருக்கலாம். மற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளில் உள்ளோரின் சுய லாபம் அல்லது பொது நலம், இவர்களை ஒன்று சேராமல் செய்து இருக்கலாம். அப்படி இருக்கையில், இந்த 20 சதவீத உள் ஒதுக்கீடு கோருவது நியாயமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒரே குரலில் ஒலிக்காத எந்த சமூகமும், போராட்ட களம் நீங்க வழி இல்லை. எந்த சமுதாயத்தின் ‘சமூக நீதியும்’, பொது நலத்தின், பொது தளத்திற்கு நகராத வரை, அதன் செந்தீ வண்ணத்தை கருமையின் துக்கம் மறைக்கத் தான் செய்யும்.
1951 ல் பிற்படுத்த பட்டோருக்கான காக்கா காலேக்கர் ஆணையத்திற்கு பின், 1979 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராய் இருந்த போது, பிந்தேஷ் பிரசாத் மண்டல், அவர்களை கொண்டு அமைக்கப் பட்ட “மண்டல் ஆணையம்” பரிந்துரைத்த அறிக்கை, 1982- 83 வாக்கில் விவாதிக்கப் பட்டு. பின்னாளில் 1990 ல் வி.பி. சிங் பிரதமர் பொறுப்பு வகிக்கும் போது தான், அரசாணை வெளியிடப் பட்டது. 10 வருடங்கள் கிடப்பில் கிடந்தது. இன்றும், இந்த கட்டுரை முடிக்கும் தருவாயில் நீதியரசர் எ. குலசேகரன் அவர்கள் தலைமையில் ‘ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு’ ஒரு ஆணையம் அறிவிக்கப் பட்டு உள்ளது.
பிராமணர்கள் அதிக பிரதிநிதித்துவம் பெற்று உள்ளனர், மற்றவர்கள் வாய்ப்பு பெறவில்லை என்றே இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி ரீதியிலான அளவீடுகளும் 1920 ல் உதயமாயின. அதே வழி முறையில், இன்று கணக்கெடுக்கும் போது இன்றைய நிலையில் பிராமணர் அல்லாதோர் அதிக பிரதிநித்துவம் பெற்று இருப்பின், இட ஒதுக்கீடு முறையை நீக்கி விடவா முடியும்? உண்மையில் அந்த நிலை தான் இன்று வர வேண்டும். அண்ணல் அம்பேத்காரின் கனவும் அதுவே. இட ஒதுக்கீடு சலுகை பெற்ற குடும்பம் மட்டுமே, அதை மென் மேலும் அனுபவிக்கும் ஏமாற்று வேலை, நடக்க கூடாது என்பதற்காகவே, இட ஒதுக்கீடு ஒரு கால அளவோடு, நீக்க பட வேண்டும் என்று, அன்றே சிந்தித்தார் பாபா சாஹேப் அம்பேத்கார்.
ஜனத் தொகையை அடிப்படையாக கொண்டு பிரிக்கப் படும் இட ஒதுக்கீடு, அதன் அடிப்படையில் எடுக்கப் படும் கணக்கெடுப்பில் மிகப் பெரும் குழப்பங்களும், இட ஒதுக்கீட்டில் இடம் பெறும் பற்றாக் குறையும் பிடி பட போவது இல்லை என்பது நிதர்சனம்.
இது தான் நிலை என்றால், அணு வெடிக்கும் காலம் நெருங்கி விட்டதோ என்ற ஐயம், எழத் தான் செய்கிறது. எந்தவொரு சமூக அமைப்பும், கட்சி, மாநிலம் மற்றும் மொழி, வண்ணம் என்ற கோட்டுக்குள் சிக்கி இருந்தால் உண்மையான சமூக நீதி பெறுவது என்பது இயலாத ஒன்று. அணு குண்டின் திரி புகைகிறது.

RESERVATION: IS IT MEETING THE ASPIRATIONS OF REAL STAKEHOLDERS? | RACOLB  LEGAL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *