அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.2,100 கோடி நன்கொடை திரண்டது!

ஆன்மீகம் இந்தியா

அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.

ராமர் கோயில் கட்டும் திருப்பணிக்கு நன்கொடை திரட்டும் பணி கடந்த ஜனவரி 15-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 27-ம் தேதி வரை நன்கொடை திரட்ட அறக்கட்டளை முடிவு செய்திருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். அதை தொடர்ந்து, நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில் சென்று நிதி வசூல் செய்தனர். இப்பணிகள், கடந்த பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2,100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அறக்கட்டளையை சேர்ந்த கோவிந்த் தேவ் கிரி தெரிவிக்கையில், ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1,100 கோடி அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டிருந்தோம். எனினும், எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகஅளவு நிதி தந்துள்ளனர். நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக ரூ.1,000 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கோயில் ரூ.400 கோடி செலவிலும், கோயில் வளாகம் ரூ.700 கோடி செலவிலும் அமைக்கப்படும். கோயில் வளாகத்தை கட்டி முடிக்க மொத்தம் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *