தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது; அத்துடன், இவ்வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும் எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெரம்பலூரில் உள்ள பெண் ஐபிஎஸ் திகாரிக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியின் இந்த புகார், தமிழக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு, புகார் குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அத்துடன், வழக்கின் தீவிரத்தை உணர்ந்த டிஜிபி, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், டிஜிபி மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இன்று தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பெண் காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை இன்று மாலைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். மாலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குறிப்பிட்ட நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரியே புகார் தர இவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்றால் சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது எனவும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.
ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தரவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்தார்.