அரிவாள் புரட்சி – திராவிட மாயை

புரட்சி என்பது மருத்துவச்சியின் வேலையைப் போல; ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும் ஆபத்தில்லை. தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.” என்றார் கார்ல் மார்க்ஸ்.
Who Is Karl Marx: Meet the Anti-Capitalist Scholar | Teen Vogue
புரட்சி என்பது பொதுவுடமைக்காரர்களின் தனிவுடமை அல்ல, வரலாறு எத்தனையோ புரட்சிகளை அவர்களுக்கு முன்னும் பின்னும் கண்டிருக்கிறது. அத்வைதப் புரட்சி, ராமானுஜப் புரட்சி, முகலாயருக்கு எதிரான மராத்தியப் புரட்சி, பாரதியின் புரட்சி, என்று இந்திய அளவில் சொல்லிக்கொண்டே போகலாம். பூகோளத்தின் மறுபக்கத்தில் பிரெஞ்சுப் புரட்சி, மார்ட்டின் லூதரின் ப்ரொடஸ்டன்ட் புரட்சி, என்று பல உண்டு. நாடாண்ட மன்னர்களை, அவர்கள் குலத்தவர்களை, சந்ததிகளை, கசாப்புக்கடை ஆடுகள் போல வெட்டித்தள்ளி விட்டு, மக்களாட்சி கொண்டுவந்தார்கள் அல்லவா? அதுதான் பிரெஞ்சுப் புரட்சி.
தூரிகை கொண்டு பிக்காசோவும், சால்வடார் டாலியும் வரைந்தது வண்ணப்புரட்சி. “பாட்டாளி வர்கத்துக்குத் தான் தனித் தகுதி உண்டு”, என்கிற மார்க்சீய மட்டுப்படுத்தலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவை எல்லாமே புரட்சிதான். சமூகத்தில் முழுமுதலான மாற்றங்களைக் கொண்டுவருவது எல்லாமே புரட்சிதான். எந்தக் கோட்டை வைத்து வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிகிறதோ அந்த கோட்டுக்குப் பெயர் புரட்சி. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறு உள்ள தமிழ்க் கவிதையை, பாரதிக்கு முன் பாரதிக்குப் பின் என்று பிரிக்க முடிகிறதல்லவா? அதுதான் பாரதி புரட்சி.
புரட்சி என்பது தவிர்க்க இயலாதது, அது வரலாற்றின் ஊழ். மார்க்ஸ் குறிப்பிடும் சமூகவியல் கணக்குகளால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. “புரட்சி என்பது ஊழ்!” என்பதைச் சொல்லத்தான் இத்தனை விளக்கங்கள்.
இதில் இந்திராகாந்திக்கும் இடமுண்டு நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு.
ஸ்ரீமதி இந்திரா காந்தியை காங்கிரஸ் தலைவராகவும், பாரதப் பிரதமராகவும், அவசர நிலையைக் கொண்டு வந்தவராகவும் மட்டும் பார்ப்பது, தட்டையான பார்வை. அவர் சில விஷயங்களை செய்துவிட்டுப் போயிருக்கிறார். எதிர்கட்சியில் இருந்தார் என்பதற்காக மறுக்க முடியாது. உணவு தானியங்களை சேமித்துவைத்துக் கொண்டு, இஷ்டப்படி விலைவாசி ஏற்றிக்கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கிய வியாபாரிகளின் கொட்டத்தை அவர் ஒடுக்கினார். இந்திய உணவு கார்ப்பரேஷனை உருவாக்கினார். பெருமுதலாளிகளின் கையில் இருந்த நிதி நிர்வாகத்தைப் பகிர்ந்து அளிக்கும்படி வங்கிகளை தேச உடைமை ஆக்கினார். பொருளாதார அதிகாரத்தில் வலிமையான இடங்கள் அரசிடம் இருக்கும்படி செய்தார். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், இந்தியப் பொருளாதாரத்தின் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. என்னைப் பொறுத்தவரை, இதைப் புரட்சி என்றே சொல்வேன்.
தமிழகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் கிராம நிர்வாகிகளை பரம்பரையாக நியமிக்கும் பழக்கத்தை ஒழித்தார். பசியோடு இருக்கும் குழந்தைகளும் பள்ளிகூடத்துக்குப் போகும் வகையில் சத்துணவு திட்டத்தைச் செய்தார். இதுவும் புரட்சிதான்.  மாணவிகளை சுயசார்பு உடையவர்களாக ஆக்கும் ஜெயலலிதாவின் சைக்கிள் திட்டமும் புரட்சிதான்.
இசையில், தமிழ்நாட்டுத் திரை இசையில் இளையராஜா செய்தது இன்னொரு வகையான புரட்சி. பக்தியைப் பகிர்ந்தளித்து இது ஈவேரா மண் அல்ல என்பதை தாளத்தோடு தட்டிக் காண்பித்தார்.
நரேந்திர மோடி? ஐம்பது ஆண்டு காலமாக, தீர்க்க முடியாத, காஷ்மீர் பிரச்னையை, கண்மூடிக் கண் திறப்பதற்குள் தீர்த்து வைத்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சைனாக்காரனிடம் கொடுத்துவிட்டு புலம்பிக்கொண்டு இருந்தது பழைய இந்தியா. இன்றைய நிலைமையோ “இந்தியாவின் ஆக்கிரமிப்பு” என்று சைனாக்காரன் அலறுகிறான். இவை எல்லாமே அழகான ஆப்பத்தின் ஓரப்பகுதிகள், ஆனால் நிஜமான சூடும் சுவையும் அதன் மையப்பகுதியில் இருக்கிறது.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும், நிறைவேற்றப்பட்ட இந்திய வேளாண் சட்டம், மோடி சர்க்காரின் விவசாயப் புரட்சி என்று சொல்லலாம். இதற்கு எங்கிருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது என்பதை கவனித்தாலே, இது எவ்வளவு நியாயமானது என்பது புரிந்துவிடும். பஞ்சாப், ஹரியானா, உத்திரப்ரதேஷ், மற்றும் சரத் பாவர்.  பரந்த இப்பாரத நாட்டில் இவ்வளவுதான் எதிர்ப்பு. திமுகவையும், ஸ்டாலினையும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நாலு ரூபாய்க்கு விற்கப்படுகிற விவசாயிகளுடைய விளைபொருள் நம் கைக்கு வரும்போது நாற்பது ரூபாயாக மாறிவிடுகிறது. “அப்படியென்றால், மீதி ரூபாயைத் திருடியன் யார்?” என்ற கேள்வியைக் கேட்டாலே, இடைத்தரகர்கள் பற்றிப் புரிந்துவிடும். பஞ்சாபில் உள்ள அரசியல்வாதிகள் (அகாலி தல் உள்பட), ஹரியானாவில் உள்ள அதிகாரவர்கங்கள், உத்திரப்ரதேசத்தின் பெரும் பணக்காரர்கள் எல்லோருடைய பிழைப்பையும், மோடி கெடுத்துவிட்டார். சரத் பவார் சந்ததியையும் சர்க்கரைக் கூட்டுறவுகளையும் பற்றி சொல்லவே வேண்டாம்; அது ஊரறிந்த ரகசியம்.
இந்த வேளாண் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு, நரேந்திர மோடியின் எண்ணப்படி நடக்கும் என்றால், இந்திய விவசாயத்தில், இது ஒரு புரட்சி முதன் முறையாக, தன்னுடைய விலையைத் தானே நிர்ணயிக்கும் தகுதி, விவசாயிக்குக் கிடைக்கும் என்பது அறிஞர்களின் கணிப்பு. நல்லது நடக்குமா? என்பதை நாட்டவர்கள்தான் நிச்சயிக்க வேண்டும்.
அரிவாள் என்பது கழுத்தை அறுக்க மட்டும்தானா, கதிரை அறுக்கவும் பயன்படுகிறது அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *