திமுக ஆட்சியை பிடிக்குமா? நம்பிக்கை இழக்கும் ஸ்டாலின் – காரணம் இதுதான்!

அரசியல் தமிழகம்

வரும் சட்டசபைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது திமுகவின் வெற்றியை பறிக்க சதி நடக்கிறது என்று புலம்பத் தொடங்கிவிட்டார். பாஜக – அதிமுகவினரின் தீவிரப்பிரசாரம், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவும் அரசு ஆதரவு மனப்போக்கு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. ஏப்ரல் கடைசிக்குள் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மறுபுறம் கூட்டணி உள்ளிட்டவற்றை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் எந்த குழப்பமோ, தடுமாற்றமோ இல்லை. தொகுதிப் பங்கீடு மட்டுமே இன்னமும் இறுதி செய்யப்பட வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளதோடு, பிரதமர் மோடியுடன் அதிமுக தலைவர்கள் கூட்டாக மேடையில் தோன்றி, பிரசாரம் மேற்கொண்டனர்.

ஆனால், திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அணியில், கூ்டணி விஷயத்திலேயே இன்னமும் ஒரு தெளிவில்லாத போக்கு காணப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டில் ‘பெரிய அண்ணன்’ போக்கில் திமுக செயல்படுவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனக்குமுறலுடன் உள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை திமுக ஒதுக்கினால், கூட்டணியில் இருந்து வெளியேறி, மக்கள் நீதிமய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கலாமா என்று காங்கிரஸ் நினைக்கும் அளவுக்கு, அந்த கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால், திமுகவும் காங்கிரசும் இன்னமும் ஒட்டும் ஒட்டாமல் உள்ளன. இரு கட்சி தலைவர்களும் இணைந்து தேர்தல் பிரசாரத்தை இதுவரை மேற்கொள்ளவில்லை; ராகுல் காந்தி தமிழகம் வந்து கோவை, திருப்பூர், புதுச்சேரியில் பிரசாரம் செய்த போதும், அங்கு திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ பங்கேற்கவில்லை.

அதேபோல், வரும் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், இப்போது கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தவர், தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார். அதிமுக அரசின் சாதனை விளம்பரங்கள் தொடர்ந்து எல்லா டிவிக்களிலும் ஒளிபரப்பாகின்றன; நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. இது, மக்களின் மனநிலையை மாற்றத் தொடங்கி இருக்கிறதாம்.

கூட்டணி கட்சியான பாஜகவும் தமிழகம் முழுவதும் கிராமங்கள் வரை வேரூன்றி வளர்ந்துள்ளது. இந்து மக்களை அவமதிக்கும்போது அதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன், மாநிலத் தலைவர் முருகன் நடத்திய வேல் யாத்திரையால் ஏற்பட்ட எழுச்சியால், அக்கட்சி மீதான மதிப்பை மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பம்பரம் போல் சுழன்று பாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து, வாக்காளர்களை விழிப்படையச் செய்து வருகின்றனர். இதுவும் நல்ல பலனை தந்துள்ளது.

அத்துடன், அரசு அதிகாரிகளின் ஆதரவும் இம்முறை அதிமுக கூட்டணி பக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். வழக்கமாக திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் அரசு ஊழியர்கள், இம்முறை பழனிச்சாமியின் ஆட்சியில் சுதந்திரக் காற்றை சுவாதித்திருப்பதாகவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் இந்த சூழல் இருக்காது என்றும், அவர்கள் மத்தியில் கருத்து உள்ளது. திமுகவில் பல அதிகார மையங்கள் உள்ளன; யார் உத்தரவை நிறைவேற்றுவது என்ற கேள்வி எழும் – திமுகவினரின் அராஜகத்தை இன்னமும் நாங்கள் மறந்துவிடவில்லை என்று அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.

இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஐபேக் டீம் வைத்துக் கொண்டு பணத்தை வாரி வீசினாலும் திமுகவின் வெற்றி வரும் தேர்தலில் எளிதாக இருக்காது என்பதை, திமுக மூத்த தலைவர்களே ஸ்டாலினிடம் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டதாக அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதன் வெளிப்பாடே, அண்மையில் கொளத்தூரில் ஸ்டாலின் புலம்பித் தீர்த்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், திமுகவின் வெற்றியைத் தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள்நடைபெற்று வருகிறது. திமுக எளிதாக வெற்றி பெற்றிட முடியாது. திமுகவை எதிர்க்கக்கூடியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பாஜகவுடன் சில அதிகாரிகளும் இணைந்துள்ளனர். சில அதிகாரிகள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தன்னிடம் கூறியதாக, அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம், முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்குமா என்பது சந்தேகமே. அதை, ஸ்டாலின் தற்போது உணரத் தொடங்கி இருக்கிறார். இதுவே, பாஜக – அதிமுக தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது. இனி வரும் நாட்களில் இரு ஆளுங்கட்சி தொண்டர்களும் தீவிரமாக களமிறங்கி பிரசாரம் செய்தால், அபாரமான வெற்றி நிச்சயம் வசப்படும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *