திடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்

அரசியல் தமிழகம்

எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழக சட்டசபைத் தேர்தல் திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது; இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளை உடனே முடித்தாக வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்; ஏப்ரல் கடைசியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நினைத்திருந்தன. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 26ம் தேதி மாலை 4:30 மணிக்கு வெளியாகும் என்ற தகவல், நேற்று பகலில் தான் வெளியானது.

நேற்று காலை தமிழக சட்டசபை கூட்டம் கூடியபோது, எம்எல்ஏக்கள் பதற்றமின்றி, கூடிப்பேசி ரிலாக்ஸாகவே இருந்தனர். ஆனால், தேர்தல் அட்டவணை மாலையில் வெளியாகிறது என்ற தகவல் வந்ததும், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆளும் அதிமுக, சட்டசபை கூட்டத் தொடரை நேற்று வேகமாக நடத்தி முடித்தது.

மதியம் 12 மணிக்குள் 110 விதியின் கீழ் முதல்வர் பல சலுகைகளை அறிவித்தார். தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் நகை வரையில் அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்றார். அமைச்சர்களில் தங்கமணி, மணியன் இருவர் மட்டுமே, முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேச அனுமதிக்கப்பட்டனர்.

அறிவிப்புகளை முடித்துவிட்டு முதல்வர் வேகமாக தன் அறைக்குச் சென்ற முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிகாரிகளின் உதவியாளர்கள், கோப்புகளுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். தலைமைச் செயலகமே பம்பரமாக சுழன்று கொண்டிருந்தனர். சட்டசபை மதியம் கூடுவதற்கு முன்பு, முதல்வரை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார். அதை தொடர்ந்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும் தகவல் வெளியானது. மதியம் நடந்த சட்டசபை அலுவலில், பட்ஜெட் உரை விவாதத்தில் பலரும் பேசி முடித்ததும், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

குறைந்த அவகாசமே இருப்பதால், அதிமுக தரப்பில் உடனே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் தொடங்கி இருக்கிறது. இன்று (பிப். 27) பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தலைமை பேச்சு நடத்தி வருகிறது. ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடை இறுதி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதே, இந்த ஜெட் வேக பேச்சு வார்த்தைக்கு காரணம்.

இதேபோல், எதிர்க்கட்சியான திமுக தரப்பிலும், திடீர் தேர்தல் அறிவிப்பு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பே அதிமுக அணியினர் தேர்தலுக்கு தயாராகி வந்த நிலையில், திமுகவோ இன்னும் பல வேலைகளை செய்தாக வேண்டியுள்ளது. அதற்கு முன்பாக திமுக பொதுக்குழு கூட்டம், திருச்சி மாநாடு நடத்தவும் திமுக தரப்பு தயாராகி வந்தது. திடீர் தேர்தல் அறிவிப்பால், அவற்றையெல்லாம் திமுக ரத்து செய்ய வேண்டியதாயிற்று.

மேலும், தொகுதி வாரியாக திமுகவினருக்கு ‘தேர்தல் செலவுக்கு’ தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை; தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், திமுகவுக்கு தேர்தல் நிதியாக வர வேண்டிய வழிகள், அவற்றை கட்சியினருக்கு கொடுக்க வேண்டிய வழிகள் அனைத்தும் அடைக்கப்ப்பட்டுவிட்டதாக, திமுக வட்டாரங்களில் கவலையுடன் பேசிக் கொள்கிறார்கள்.

மொத்தத்தில், திடுதிடுப்பென தேர்தல் அட்டவணை வெளியானதில் ஆளுங்கட்சியை விட திமுகவிற்கே பெரும் சறுக்கலாகிவிட்டது. பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற அடுத்த நாளே தேர்தல் தேதியை அறிவித்துவிட்டார்களே என்று, உடன் பிறப்புகள் பெருமூச்சு விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *