நாகாலாந்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

நாகாலாந்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கும் முறைகள், கற்றல் சூழல், பள்ளிகளின் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்த 68 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் திட்டத்தில் மத்திய அரசு, நாகாலாந்து அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை இன்று கையெழுத்திட்டன. ‘‘நாகலாந்து: வகுப்பறை கற்பித்தல் மற்றும் அதற்கான சூழல்களை அதிகரிக்கும் திட்டம்’’, அங்குள்ள பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்தும்; ஆசிரியர்களின் தொழில் மேம்பாட்டுக்கான வாய்ப்பை உருவாக்கும், ஆன்லைன் மூலமான கற்றல் தொழில்நுட்பத்தை உருவாக்கும்; கொள்கைகளையும், திட்டங்களையும் சிறப்பாக கண்காணிக்க உதவும். இது போன்ற ஒருங்கிணைந்த அணுகுமுறை, வழக்கமான கல்வி முறைக்கும், கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டால் சவால்களை குறைக்கவும் உதவும். இந்த சீர்திருத்தங்கள் மூலம் நாகாலாந்து அரசு பள்ளிகளில் உள்ள சுமார், 1,50,000 மாணவர்கள் மற்றும் 20,000 ஆசிரியர்கள் பயனடைவர். இது குறித்து பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் திரு.சி.எஸ்.மொஹபத்ரா கூறுகையில், ‘‘மேம்பாட்டு உத்திகளில், மனித வள மேம்பாடு முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவின் கல்விமுறையை மாற்ற மத்திய அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’’ என்றார். இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் திரு மொஹபத்ரா, நாகாலாந்து அரசு சார்பில் பள்ளி கல்வித்துறை முதன்மை இயக்குநர் திரு ஷாநவாஸ், உலக வங்கி சார்பில், இந்தியாவின் இயக்குனர் திரு ஜூனைத் அகமது ஆகியோர் கையெழுத்திட்டனர். திரு ஜூனைத் அகமது கூறுகையில், ‘‘இந்தியாவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தாலும், தொழிலாளர் சந்தையின் தேவையை நிறைவேற்றவும், எதிர்கால வளர்ச்சிக்கும், கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது’’ என்றார். இத்திட்டத்துக்காக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியில் (IBRD) பெறும் 68 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை 14.5 ஆண்டு காலத்துக்குள் அடைக்க வேண்டும்.

Continue Reading