முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை வந்தடைந்தது

இந்தியா

மூன்று டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள ஹாப்பாவில் இருந்து 2021 ஏப்ரல் 25 அன்று மாலை 6.03 மணிக்கு கிளம்பிய ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிராவில் உள்ள கலம்பொலியை 2021 ஏப்ரல் 26 காலை 11:25 மணிக்கு வந்தடைந்தது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தடைவதற்காக பசுமை வழித்தட வசதி வழங்கப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தால் இயக்கப்படும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது.

860 கிலோமீட்டர்கள் பயணித்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் அதன் இலக்கை அடைந்தது. சுமார் 44 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்த டேங்கர்கள் எடுத்து வந்தன. ஆக்சிஜன் எக்ஸ்பிரசுக்காக தேவையான ஏற்பாடுகள் கலம்பொலி சரக்குகள் மையத்தில் செய்யப்பட்டிருந்தன.

விரம்காம், அகமதாபாத், வடோதரா, சூரத், வசாய் சாலை மற்றும் பிவாண்டி சாலை வழியாக அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் கலம்பொலியை வந்தடைந்தது. ஜாம் நகரில் உள்ள திருவாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஆக்சிஜன் டேங்கர்களை வழங்கினர்.

நாக்பூரில் இருந்து நாசிக் வழியாக மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் வரையிலும், லக்னோவில் இருந்து பொகாரோ வரையிலும், திரும்பவும் அதே எதிர் வழிதடத்திலும், சுமார் 150 டன்கள் திரவ ஆக்சிஜனை 2021 ஏப்ரல் 25 வரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் இந்திய ரயில்வே எடுத்துச் சென்றுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *