விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் பாகல் கோட் மாவட்டத்தில் உள்ள கேராகால்மட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, இவ்வாறு கூறினார். மேலும், இன்று பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவிலும் கலந்துகொண்டார்.
”விவசாயிகளை தூண்டிவிடுபவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். விவசாயிகள் நலனில் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் ஆட்சியில் ஏன் விவசாயிகளுக்கு ₹6000 மானியம் அளிக்கவில்லை. அதே போன்று, எத்தனால் தொடர்பான கொள்கையை ஏன் மறு பரிசீலனை செய்யவில்லை” என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தில்லியின் எல்லை பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குடியரசு தினத்தில் தில்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.